ஆபிரமும் ஆபிராமின் சகோதரனுடைய மகனாகிய லோத்தும் கானானுக்கு வரும்போது ஒன்றாக வந்தார்கள். ஒன்றாக சம்பாதித்தார்கள். தற்போது இருவரும் ஒன்றாக குடியிருப்பதால் இருவரது வேலைக்காரர்களுக்குள்ளும் வாக்குவாதம் நடப்பதை கண்ட ஆபிராம், இப்படியே போனால் நாளை லோத்துவுக்கும் எனக்கும் கூட வாக்குவாதம் நேர வாய்ப்பு உண்டு, அப்படி சொந்த குடும்பத்துக்குள்ளேயே வாக்குவாதம் நடந்தால் சுற்றியிருக்கும் கானானியருக்கும் பெரிசியருக்கும் முன்பாக அது சாட்சி கேடாகும் என கருதி, லோத்துவை அழைத்து பிரிந்து செல்ல சொல்லி லோத்துவுக்கு விருப்பமான இடத்தை தேர்ந்தெடுக்கவும் சொல்கிறார்.
(ஆதியாகமம் 13:7-9
ஆபிராமுடைய மந்தைமேய்ப்பருக்கும் லோத்துடைய மந்தைமேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. அக்காலத்திலே கானானியரும் பெரிசியரும் அத்தேசத்தில் குடியிருந்தார்கள். ஆபிராம் லோத்தை நோக்கி: எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர். இந்தத் தேசமெல்லாம் உனக்குமுன் இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்றான்.)
லோத்து மிக செழிப்பான பகுதியை தேர்ந்தெடுத்தார். தன் சித்தப்பா செழிப்பான இடத்துக்கு செல்லட்டும் என லோத்து நினைக்கவில்லை. மாறாக தனக்கே செழிப்பான இடம் கிடைக்க வேண்டும் என எண்ணினார்.
ஆனால் ஆபிராம் அப்படியல்ல, தனக்கு கிடைப்பது செழிப்பான இடமோ செழிப்பில்லா இடமோ, அது முக்கியமல்ல, குடும்பத்தில் சண்டை சச்சரவு இல்லாமல் வாழ்வது போதும் என நினைத்தார்.
ஆபிராம் அன்று லோத்து கேட்டதை விட்டுக்கொடுத்ததால் அவனது உறவு கெட்டுபோகவில்லை. ஒருவேளை ஆபிராம் விட்டுக்கொடுக்காமல் இருந்திருந்தால் ஆபிராமுக்கு செழிப்பான இடம் கிடைத்து இருக்கலாம். ஆனால் லோத்துவுக்கு அதனால் மனக்கசப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு.
இயேசு கிறிஸ்து பூமியில் மனிதனாய் வாழ்ந்தபோது ஒருவன் வந்து தன் சகோதரனுடன் பஞ்சாயத்து பண்ணி தன் சொத்தை பெற்றுத்தர சொன்ன போது, இயேசு அதற்கு உடன்படவில்லை. மாறாக அந்நேரத்தில் தானே பொருளாசைக்கு எதிராக பாடம் எடுத்தார்.
(லூக்கா 12:13-15
அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஆஸ்தியைப் பாகம்பிரித்து என் வீதத்தை எனக்குத்தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். அதற்கு அவர்: மனுஷனே, என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார் என்றார். பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.)
இங்கே இயேசு கிறிஸ்துவிடம் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மாறாக ஆஸ்தியை பங்கிடுகிறவனாக என்னை உங்களுக்கு வைத்தது யார் என்ற கேள்வியை முன்வைத்தார்.
ஆனால் இன்று அநேக கிறிஸ்தவர்கள் இதுபோன்ற விஷயங்களை தான் தேவனிடம் ஜெபம் என்ற பெயரில் கோரிக்கையாக வைக்கின்றனர். அன்றைக்கு இயேசு கூறிய பதிலிலிருந்து மாற்றம் இருக்கும் என்று நினைக்கிறார்களோ என்னவோ.
அன்புக்குரியவர்களே உங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய விஷயமேயானாலும் வேறொருவரோடு சண்டையிட்டு பெற்றுக்கொள்ள வேண்டாம். சண்டை மூலம் பெற்றால் உறவை இழப்பீர்கள். ஆனால் விட்டுக் கொடுப்பதன் மூலம் நஷ்டமடைந்தாலும் உறவை இழக்காமல் சம்பாதிப்பீர்கள். உறவா? சொத்தா?
ஆகவே தான் பவுல் கேட்கிறார். நீங்கள் ஏன் நஷ்டத்தை பொறுத்துக்கொள்ள கூடாது என்று.
(1 கொரிந்தியர் 6:7
நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை?)
ஆம் வழக்காடி சண்டை போட்டு சகோதரத்துவத்தை இழப்பதை விட, நஷ்டமே அடைந்தாலும் விட்டுகொடுத்து சகோதரத்துவத்தை பேணுவது உங்கள் சாட்சி வாழ்வுக்கு ஏதுவாகும்.
சொத்து போனாலும் விட்டுக் கொடுத்தால் அன்பு கெட்டுபோவதில்லை.
☝🏿 இதை பின்பற்றுங்கள் அன்பே பிரதானம் எனில்.
சொத்து கிடைத்தாலும் விட்டுக்கொடுக்கா விட்டால் அன்பு கெட்டுபோகும்
☝🏿 இதை பின்பற்றுங்கள் அன்பை விட சொத்தே பிரதானம் எனில்