சோர்வு- அதும் தேவனை விட்டு விலக செய்யு நினைக்கும் அளவுக்கு தீர்வு என்ன?

Spread the Truth

சோர்வுக்கான காரணங்கள்

1) தொடர் பிரச்சனைகளாக இருக்கலாம்
2) உங்கள் சில கேள்விகளுக்கு பதில் தெரியாததால்/கிடைக்காததால் இருக்கலாம்
3) நம்பிக்கையானவர் மூலம் ஏமாற்றப்பட்டதாலும் இருக்கலாம்
4) ஏதோ ஒரு பாவ பழக்கத்திலிருந்து மீழ முடியாததாகவும் இருக்கலாம்
5) மேற்கூறிய எதுவும் இல்லாமல் அதிக நேரம் சும்மா இருப்பதினால் ஏற்படும் அதீத சிந்தனையினிமித்தமாகவும் இருக்கலாம்

மேற்கூறிய ஏதோ காரணத்தின் அடிப்படையில் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

இதிலிருந்து வெளிவர

1) முதல் காரணமெனில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் உங்களுக்கு மட்டுமல்ல எல்லா மனிதர்களுக்கும் இது உண்டு. யாரும் விதிவிலக்கல்ல. சிலருக்கு உங்களை விட குறைவான பிரச்சனை இருக்கலாம்,ஆனால் பலருக்கு உங்களை விட அதிகமான பிரச்சனைகளும் உண்டு. ஆனால் உங்களால் எந்த அளவுக்கு தாங்க முடியுமோ அதை விட கூடுதலாக பிரச்சனைகள் வராது. எந்த பிரச்சனையானாலும் என்னால் தாங்க கூடிய அளவுக்கு தான் தேவன் அனுமதிப்பார் என்ற உண்மையை உணருங்கள். மேலும் இதிலிருந்து தப்பிக்க வழியும் தேவனால் காண்பிக்க முடியும் என நம்புங்கள்

(1 கொரிந்தியர் 10:13
மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.)

மேலும் எவ்வளவு பெரிய பிரச்சனையானாலும் இந்த பூமியில் வாழும் கொஞ்ச காலம் வரைதான் இருக்க போகிறது இதினிமித்தம் என் புறம்பான மனிதன் அழிந்து உள்ளான மனிதன் புதிதாக்கபட முடியும். மேலும் அதை தொடர்ந்து எந்த பிரச்சனையும் இல்லாத முடிவில்லா மகிமை தேவன் வைத்திருக்கிறார் என்ற நம்பிக்கையில் சோர்ந்து போகாமல் தைரியம் கொள்ளலாம்

(2 கொரிந்தியர் 4:16-17
ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.
மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.)

இவ்வளவு உண்மைகளையும் மீறி மேலும் பயம் ஏற்படும் எனில், பயப்படும்போது தேவனை நம்புங்கள்
(சங்கீதம் 56:3
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.)

கடவுளிடம் பகிருங்கள். எவ்வளவு நேரம் ஆகுதோ எடுத்துகொண்டு தனிமையில் சென்று மனதில் உள்ளதை கொட்டி தீர்த்து விடுங்கள். அழுகை வந்தால் அழுது தீர்த்து விடுங்கள். சோர்வு மாறி சமாதானம் உருவாகும்
(பிலிப்பியர் 4:6-7
நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.)

2) உங்களிடம் பல கேள்விகள் இருக்கலாம். அதற்கு பதில் தெரியாமல் இருக்கலாம் எனில்,

நாளை என்ன நடக்கும் என்ற எதிர்காலத்தின் அடிப்படையிலான கேள்விகள் எனில் அந்த கேள்விகை தைரியமாக தேவன் மேல் நம்பிக்கை கொண்டு தூக்கி வீசி விடுங்கள்.
இன்றைய‌தினத்துக்கான பாடுகளை சுமந்தால் மட்டும் போதும், எதிர்காலத்தை நினைத்து அந்த பாடுகளையும் மண்டையில் சுமக்க அவசியமில்லை.

(மத்தேயு 6:34
ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்; அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்.)

பரம பிதா கூட இருக்கிறார் என்ற நம்பிக்கை போதுமானது.

(மத்தேயு 6:32
இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.)

ஒருவேளை ஏதோ கேள்விகள், ஆனால் ஏன் நடக்கிறது என அர்த்தம் தெரியாததினால் எனில்

எல்லா கேள்விக்கும் பதில் தெரிந்தே ஆகணும் என இல்லை. மனிதனுக்கு தெரியாத பல கேள்விகள் ஆண்டவர் வைத்துள்ளார். யோபுவுக்கே பல புரியாத கேள்விகள் இருந்தது. அதற்கான பதிலை ஆண்டவர் கடைசிவரை சொல்லவில்லை. அவனுக்கு புரிய வைத்தார் எல்லா கேள்விக்கும் பதில் தெரிய வேண்டுமென்று அடம்பிடிக்க கூடாதென்று. இந்த சிந்தை வந்தால் தேவன் ஏற்கனவே பல கேள்விக்கான பதில்களை தந்துள்ளார் அல்லவா ஆகையால் தெரியாத பதில்களுக்காக கவலை கொள்ளாமல் தைரியம் கொள்ளலாம். வாழ்வில் நடக்கும் எல்லாவற்றுக்கும் ஏன் என்ற கேள்விக்கு விடை தெரியாவிட்டாலும் ஆண்டவருக்கு தெரியாமல் ஒன்றும் நடக்காது. ஒரு முடி கூட கீழே விழாது என்ற நம்பிக்கையில் மகிழலாம்

3) நம்பிக்கையானவர் மூலம் ஏமாற்றப்பட்டதாலும் இருக்கலாம். அல்லது அன்புக்குரியவர் இழக்கப் பட்டதாலும்

எந்த மனிதனும் சூழ்நிலைக்கைற்ப மாற கூடிய வாய்ப்பு உண்டு. ஆகையால் அவர்களால் பல வேளைகளில் ஏமாற்றப்பட வாய்ப்பு உண்டு என்ற உண்மையை மனதில் பதிய வைக்க வேண்டும்.
ஆனால் யாரையும் ஏமாற்றாத ஒருவர் கூட இருக்கிறார். இன்பத்திலும் துன்பத்திலும் எவ்வேளையிலும் கூட இருக்கிறார். ஆகையால் ஏமாற்றினவர்களை நினைத்து யோசிக்காமல் எப்போதும் கூட இருக்கும் நம்பிக்கைக்குரியவரை பற்றி சிந்தித்து கொண்டிருந்தால் இதை மேற் கொள்ளலாம்

சங்கீதம் 118:8
மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.

ஒருவேளை யாரையாகிலும் இழக்க கொடுத்திருந்தால் இது மனித வாழ்வில் கட்டாயம் நடக்க வேண்டிய ஒன்று என்ற உண்மையை ஏற்க வேண்டும். அன்புக்குரியவர் போனாலும் எப்போதும் அன்பாயிருப்பவர் கூட உண்டு. உன்னை விட்டு விலகுவதுமில்லை கைவிடுவதுமில்லை என்று சொல்லியிருக்கிறாரே. ஆகையால் யாரையாகிலும் இழக்கப்பட்டிருந்தால் அதும் தேவ சித்தம் தான் என்றறிந்து கர்த்தரின் அன்புக்குள் மகிழலாம்

4) ஏதோ ஒரு பாவ பழக்கத்திலிருந்து மீழ முடியாததாகவும் இருக்கலாம்

பல முயற்சிகள் செய்தும் ஏதோ ஒரு பாவத்திலிருந்து வெளிவர முடியாமல் தடுமாறி என்னால் இந்த பாவத்திலிருந்து வெளிவர முடியவே முடியாது என எண்ணி அந்த விரக்தியிலேயே என்னால் தேவனுக்கு உண்மையாக இருக்க இயலாது.‌ஆகையால் தேவனை விட்டு விட்டு பாவத்திலேயே இருந்து விடலாம் என எண்ணி அதினிமித்தம் ஏற்படும் சோர்வாயின், கவலை வேண்டாம். கண்டிப்பாக தேவன் உதவி செய்வார். எத்தனை முறை எழ முயற்சித்து தோற்றாலும் தைரியமாக கிருபாசனத்தண்டை வந்தால் மன்னித்து ஏற்றுக்கொள்வார். தொடர்ந்து எழ விருப்பமும் முயற்சியும் இருந்தால் கண்டிப்பாக எழுந்து விழாமல் நிற்க தேவன் உதவுவார். பாவம் செய்ய காரணமான சூழலை விட்டு விலகி வேறு ஒரு நல்ல பழக்கத்தை ஏற்படுத்துவது. (புத்தகங்கள் படிப்பது, அல்லது வேறு ஏதேனும் நற் செயல்களில் ஈடுபடுவது)

தனிமையை தவிர்த்து ஆவிக்குரிய நண்பர்களோடு நேரத்தை செலவிடுவது, பாவத்துக்கு காரணமான உபகரணங்களை தூக்கி வீசிவிட்டு வேதத்தை தியானிப்பது, எழுதுவது போன்ற காரியங்களுக்கு பயன்படுத்துவதன் மூலம் பாவ பழக்கத்திலிருந்து வெளிவர முடியும். ஆகையால் துவண்டு சோர்வடையாமல் என்னை பெலப்படுத்தும் தேவனால் எதையும் மேற்கொள்வேன் என்ற உறுதியோடு தேவனோடு இன்னும் நெருங்கி உறவாடுங்கள்.

5) அதிக நேரம் சும்மா இருப்பதினால் ஏற்படும் அதீத சிந்தனையினிமித்தமாகவும் இருக்கலாம்

சும்மா இருப்பதும் சோர்வுக்கு காரணமாகும். ஆகையால் ஏதாகிலும் வேலையில் உங்களை ஈடுபடுத்தி கொண்டிருங்கள். நண்பர்களோடு குடும்பத்தோடு அதிகமாக பேசுங்கள். விளையாட்டில் ஆர்வமிருந்தால் அதற்கான வாய்ப்பு அமைந்தால் நன்றாக விளையாடுங்கள். (உடல் ரீதியிலான விளையாட்டு அல்லது செஸ் போன்ற அறிவு ரீதியான விளையாட்டு மட்டுமே கம்ப்யூட்டர் கேம்ஸ் அல்ல.)

சோர்வடைய காரணமான சில காரணங்களையும் அதற்குண்டான தீர்வையும் எனக்கு தெரிந்தவரையில் எழுதியுள்ளேன்.

மேலும் சில ஆலோசனை சுருக்கமாக
1) தனிமையாக இருப்பதை தவிர்க்கவும். நல்ல நண்பர்களோடு குடும்பத்தோடு இருக்கவும்.
2) ஏதேனும் ஒரு நல்ல செயலில்/வேலையில் முழுமையாக ஈடுபடுங்கள்
3) விளையாட்டு/உடற்பயிற்சி களில் உங்களை ஈடுபடுங்கள்
4) உங்களை நீங்களே திடப்படுத்தி கொள்ளுங்கள்.
5) கவலை இருந்தால் அறையை பூட்டி எவ்வளவு நேரமாயினும் அழுது தீர்த்து விடுங்கள் தேவனிடம்.

இறைவனை குறித்தும் அவரது செயல்கள் குறித்தும் அவரது வழிகாட்டுதல் குறித்தும் சிந்தியுங்கள். வேதத்தை தியானிக்க அதிக நேரம் செலுத்துங்கள்

பிலிப்பியர் 4:8-9
கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.
நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்.

Share