கர்த்தரை தேடுபவர்களுக்கு ஒரு நன்மையும் குறைவுபடாதா?

Spread the Truth

கிறிஸ்தவர்களுக்கு ஒரு நன்மையும் குறைவு படாதா??

சங்கீதம் 34:10
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங்குறைவுபடாது.

ஒரு பிரசங்கியாரின் ஒரு பிரசங்கத்தை கேட்க நேர்ந்தது. அதில் கர்த்தரை தேடுபவர்களுக்கு வரும் ஆசீர்வாதங்கள் என்னென்ன என பேசியவர் தன் முதல் குறிப்பாக மேலுள்ள வசனபகுதியை காண்பித்து கர்த்தரை தேடினால் உலகம் முழுவதும் பஞ்சம் வந்தாலும் உங்கள் வீட்டில் சாப்பாடு இருக்கும், உலகம் முழுதும் பெட்ரோல் தீர்ந்து போனாலும் உங்கள் வண்டி ஓடும் என அளந்து விட்டார். இது சரியா?

இது சரியென்றால் முதல் நூற்றாண்டில் கர்த்தரை தேடிய கிறிஸ்தவர்களுக்கு எந்த பிரச்சனையும் வந்திருக்காதுதானே.
அன்று எருசலேமில் பஞ்சம் வந்தபோது அங்கே இருந்த கிறிஸ்தவர்களும் பாதிக்கப்பட்டார்கள். ஆகவே தான் பவுல் தர்மசகாயம் அனுப்பும்படி தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

(1 கொரிந்தியர் 16:1
பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக்குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்குப்பண்ணின திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள்.)

பவுல் கர்த்தரை தேடினவன்தானே பின் பவுல் ஏன் பட்டினியாயிருந்தார்? குறைச்சலில் இருந்தார்? அப்போ அன்றைக்கு பட்டினியாக இல்லாதவர்கள் கர்த்தரை தேடினவர்களாகவும் பட்டினியாக இருந்த பவுல் கர்த்தரை தேடாதவராகவும் காணப்பட்டாரா?
பவுல் திருப்தியாக இருக்க மட்டுமல்ல பட்டினியாக இருக்கவும், நிறைவாயிருக்க மட்டுமல்ல குறைவாயிருக்கவும் போதிக்கப்பட்டார். அப்படியானால் சங்34:10 ன் படி உலகமெல்லாம் பஞ்சம் வந்தாலும் பவுலுக்கு பட்டினி வராது சாப்பாடு இருக்கும் என்ற வெளிப்பாடு கிடைக்கவில்லையா என்ன?

(பிலிப்பியர் 4:12
தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்.)
பவுல் போதிக்கப்பட்டதற்கும் இன்றைய கிறிஸ்தவர்கள் போதிக்கப்படுவதற்கும் எவ்வளவு வித்தியாசம்

மேலும் எபிரேய ஆசிரியர் கர்த்தரை தேடிய பலர் குறைவை அனுபவித்தார்கள் என்கிறாரே. குறைவை மட்டுமல்ல அதை விட தீவிரமான துன்பங்களை அனுபவித்தார்கள்
(எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:36-38
வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்;
கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்; உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை; அவர்கள் வனாந்தரங்களிலேயும் மலைகளிலேயும் குகைகளிலேயும் பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள்.)

மேலும் பல மிஷ்னரிமார் வாழ்க்கையை பார்த்தால் இன்று பிரசங்கித்த பிரசங்கியாரின் கூற்றுப்படி பல மிஷ்னரிமார்கள் கர்த்தரை தேடாதவர்கள் என்ற முடிவுக்கு வரலாமா?

வெறும் இன்றைய காலத்தில் நான் வாழும் வாழ்க்கையை வைத்து எனக்கு எந்த குறைச்சலும் இல்லை ஆகையால் கர்த்தரை தேடுகிற யாருக்கும் எந்த குறைச்சலும் வராது என நினைத்து பழைய ஏற்பாட்டு வசனங்களை வைத்து மக்களிடம் பொய் கூற கூடாது.

இந்தியா முழுவதும் மோடியின் பணமதிப்பிழப்பால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட போது கிறிஸ்தவர்களுக்கு (கர்த்தரை தேடுகிறவர்களுக்கு) மட்டும் எந்த பாதிப்பும் வரவில்லையா? சோமாலியா போன்ற நாடுகளில் கர்த்தரை தேடாதவர்களுக்கு மட்டும் தான் பஞ்சம் உள்ளதா?

கர்த்தரை தேடினால் என்ன நன்மை கிடைக்கும் என சொல்லி அதனால் தேடுங்கள் என்பது கிறிஸ்தவ உபதேசமே ஆகாது.

நாம் ஏன் கர்தரை தேட வேண்டும்?
அவர் முதலில் என்னை தேடி வந்து தன் அன்பை விளங்கப்பண்ணினதால்.
கர்த்தரை தேடினால் என்ன கிடைக்கும்?
கர்த்தரே கிடைப்பார் அதை விட வேறென்ன‌ வேண்டும்.

கர்த்தரை தேடினால் நன்மை குறைவுபடாதா? ஆம். என்ன நன்மை?

மத்தேயு 7:11.. பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?

லூக்கா 11:13
, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.

கர்த்தரை தேடுகிறவர்களுக்கு அவர் பரிசுத்த ஆவியானவரையே கொடுத்து விட்டார். இதை விட பெரியதா உலக காரியங்கள்?

ஆம் நாம் நமக்கு தேவை என்று நினைத்து பல காரியங்களை தேவனிடம் கேட்கலாம். ஆனால் நமக்கு எது தேவையோ (பிதாவின் சித்தப்படி) அதற்கேற்றபடி நம்மை நடத்தவும் நமக்காக சரியாக வேண்டவும் செய்கிறார் பரிசுத்த ஆவியானவர். அந்தபடி குறைச்சல் கூட நன்மையாக இருக்க வாய்ப்பு உண்டு. உலகமே செழிப்பில் இருந்தாலும் கர்த்தரை தேடுகிற ஒருவனுக்கு மட்டும் ஏற்படும் பட்டினி கூட அவனது நன்மையாக இருக்க வாய்ப்பு உண்டு. பவுலுக்கு மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டது. அது நீங்க வேண்டும் என்பது பவுலின் விருப்பம். ஆனால் தேவன் அதை செய்யவில்லை. இங்கே பவுலது இந்த முள் அல்லது பலவீனம் அவனுக்கு நன்மைதான்.

என்ன நன்மை? அதிக வெளிப்பாடு பெற்றதன் நிமித்தம் தன்னை பெருமைபடுத்தி விட கூடாது என்ற நன்மை

இந்த பலவீனத்தையும் தாங்கும்படியாக தேவ வல்லமை பவுலின் மேல் தங்கத்தக்கதான தேவ கிருபை கிடைத்தது நன்மை

(2 கொரிந்தியர் 12:7
அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது.

2 கொரிந்தியர் 12:9
அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.)

கர்த்தரை தேடுகிறவர்கள் வாழ்வில் நடக்கும் அனைத்தும் நன்மைக்கேதுவானவைகள். அது பட்டினியாகவே இருந்தாலும். கர்த்தரை தேடுகிறவர்களுக்கு இந்த நன்மைதான் ஒருபோதும் குறைவுபடாது.

(ரோமர் 8:28
அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.)

Share