ஓய்வுநாள்

Spread the Truth


ஆண்டவர் 6 நாட்களிலுமாக எல்லாவற்றையும் படைத்து மனிதனையும் உண்டாக்கினார். பின் 7வது நாளில் ஓய்ந்திருந்தார். ஆண்டவர் ஓய்ந்திருந்தார் என்பது ஆறு நாள் வேலை செய்த களைப்பில் ஓய்வு எடுத்தார் என்ற பொருளில் அல்ல, மாறாக ஆறு நாளில் எல்லாவற்றையும் படைத்து முடித்ததால் அடுத்து வேறு எதையும் படைக்க இல்லாததால் ஒய்ந்திருந்தார் என்றே பொருள் கொள்ள வேண்டும். அந்த நாளை ஆண்டவர் ஆசீர்வதித்தார் மட்டுமல்ல பரிசுத்தமாக்கினார்.

தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளை எல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். (ஆதியாகமம் 2:2)

ஆண்டவர் ஓந்திருந்த நாளை பரிசுத்தமாய் ஆசரிக்க வேண்டும் என்று இஸ்ரேலருக்கு கட்டளையும் தந்தார்.
( ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக. யாத் 20 :8)

(ஆறுநாளும் வேலைசெய்யவேண்டும், ஏழாம்நாள் பரிசுத்த சபைகூடுதலான ஓய்வுநாள், அதில் ஒரு வேலையும் செய்யவேண்டாம்,; அது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் நாளாயிருப்பதாக. லேவி 23 :3)

என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்தபடி, உன் காலை விலக்கி, உன்வழிகளின்படி, நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும் உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால். ( ஏசாயா 58:13)

கிறிஸ்தவர்களுக்கு ஓய்வுநாள் ஆசரிப்பு கட்டளையாக இல்லை எனினும், பல வேளைகளில் ஓய்வு நாளை ஏன் ஆண்டவர் ஏற்படுத்தினார் என்ற உண்மையை பல வேளைகளில் அநேகர் உணர்வதில்லை.

ஆண்டவரே ஒரு நாள் ஓந்திருந்தார். ஏன் ஆண்டவர் நினைத்திருந்தால் ஒரு நாளிலேயே அனைத்தையும் படைத்து மீதமுள்ள எல்லா நாளிலும் ஓய்ந்திருக்க முடியாதா? பின் ஏன் ஆறு நாட்களாக படைத்து பின் ஏழாவது நாள் ஓய்ந்திருந்தார்.

தேவன் ஒரு நாளில் படைத்திருக்க முடியும். ஆனால் வாரத்தில் எல்லா நாளும் வேலை செய்ய கூடாது. கண்டிப்பாக ஒருநாள் ஓய்வு தேவை என்று மனிதனுக்கு உணர்த்துவிக்கவே அப்படி செய்தார். இதை இயேசு கிறிஸ்துவின் வாக்கிலிருந்து அறியலாம்.

24×7 என்று ஓடுகிற மனிதா வாரத்தில் ஒரு நாள் உனக்கு ஓய்வு தேவை. மனிதனை படைத்த தேவனுக்குதானே தெரியும் அவனது உடல் நிலை பற்றி. ஒரு machine உருவாக்கும் பொறியாளர் அது எவ்வளவு நேரம் தொடர்ந்து வேலை செய்யலாம் எவ்வளவு நேரம் ஓய்வு தேவை என தீர்மானித்து சொல்வது போல மனிதனை படைத்த ஆண்டவர் மனித உடல் எவ்வளவு வேலை செய்யும் எப்பொழுது ஓய்வு தேவை என்பதை சொல்லியுள்ளார். ஆகவே ஓய்வு நாள் மனிதனுக்காகவே மனிதனின் நலனுக்காகவே ஏற்படுத்தபட்டது

(பின்பு அவர்களை நோக்கி,மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை,ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது.
மாற் 2 :27)


இதை அறியாமல் உடலுக்கு ஓய்வே இல்லாமல் வேலை செய்ய வேண்டாம். 30நாட்களும் ஓய்வின்றி வேலை செய்து உடலை கெடுக்கவும் வேண்டாம்.

மேலும் வாரத்தில் ஒருநாள் உள்ள ஓய்வை இறைமக்களாக ஒன்றிணைவதற்கு (சபை கூடி வருதல்) பயன்படுத்தலாம். 6 நாட்கள் வேலை நிமித்தம் ஏற்படும் உடல் வலியை குறைக்க Rest உதவுகிறது. ஆனால் 6 நாட்கள் வேலை நிமித்தம் ஏற்படும் மன அழுத்தம், மன சோர்வு போன்றவைகளை குறைக்க இந்த அன்பின் ஐக்கியம் உதவும். ஒருவரை ஒருவர் கவனித்து ஒருவருக்கொருவர் புத்தி சொல்லி ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி கொள்ள இந்த ஓய்வு நாள் உதவும். இதனிமித்தம் பணி நிமித்தம் உள்ள மனச்சுமை நீங்கி புத்துணர்ச்சியுடன் அடுத்த வாரத்தில் பிரவேசிக்க இயலும்.
(நடைமுறையில் மேற்கூறிய ஒருவரையொருவர் கவனித்து புத்திசொல்லி அன்பை பரிமாறும் செயல்கள் சபை கூடுகையில் இல்லாத நிலை உள்ளது. சபையிலே வெறும் பாடுவதற்கும் செய்தி கேட்பதற்கும் செல்லும் நிலை தான் உள்ளது. மேலும் சில சபைக்கு சென்றால் மனச்சுமை நீங்கும் என எதிர்பார்த்தால் அங்கே போடும் பதவி சண்டைகள் நிமித்தம் மேலும் மன அழுத்தம் வரும் நிலைதான் உள்ளது)

அப்படியாயின் ஒத்த உபதேச கருத்த உள்ளவர்கள் சிறிய குழுவாயினும் இணைந்து அதை சரியாக நடைமுறை படுத்தலாம்.

மேலும் குடும்பத்தை விட்டு வேலையை குறித்தே அதீத சிந்தனையில் இருப்போர் அந்த ஒருநாளாகிலும் முழுதுமாக குடும்பத்தினருடன் செலவிட்டு சந்தோஷமாக இருக்கலாம்.

ஆண்டவர் இதற்காக தான் மனிதனுக்காக ஓய்வுநாளை நியமித்தார். இஸ்ரவேலருக்கு கட்டளையாகவும் கொடுத்தார். இஸ்ரேலர் கடைபிடித்தனர்- ஆனால் ஏன் ஆண்டவர் நியமித்தார் என்ற உண்மை தெரியாமலேயே

இன்று நமக்கு தெரியும் ஆண்டவரின் இருதயத்தில் இருந்தது என்ன? எதற்காக ஓய்வுநாளை நியமித்தார் என்று.

ஆனால் இதை புரியாமல் பலர் அதை சடங்காக இஸ்ரேலரை போல அனுசரிக்க நினைக்கின்றனர். ஆகவே தான் சனிக்கிழமையை முக்கியப்படுத்தி அநேகருக்கு இடறலாக உள்ளனர்.

எப்படியெனில் ஞாயிற்றுகிழமை அல்லது வெள்ளிகிழமை விடுமுறைநாள் உள்ள நாடுகளில் வசித்து வேலை செய்பவர்களில் பலருக்கு சனிக்கிழமை விடுமுறை இருக்காது. அப்படி பட்டவர்களிடம் சனிக்கிழமை தான் உண்மையான ஓய்வுநாள் இந்தநாளில் தான் வேலை செய்ய கூடாது, மீறி சனிக்கிழமை வேலை செய்து ஞாயிற்றுக்கிழமையோ வெள்ளிகிழமையோ ஓய்ந்திருந்தாலும் அது பாவம் என கூறி பலரை பயமுறுத்தி இடற பண்ணுகின்றனர்.

ஆண்டவர் ஏன் ஓய்வுநாளை நியமித்தார் என்றும்‌ அவரது இருதயத்தில் இருந்தது என்ன என்றும் பார்த்தோம். அதிலிருந்து ஓரு நாளை முக்கியப்படுத்துவதோ சடங்காச்சாரமாக பக்தி காரியங்களை செய்வதோ அல்ல தேவனின் மனதில் இருந்தது என்றும் பார்த்தோம். மாறாக ஓயாமல் வேலை செய்யும் மனிதனின் (சரீரம் மற்றும் மனம்) மீதுள்ள பாசமே தேவனின் மனதில் இருந்தது என்று பார்த்தோம்.

ஆகையால் மனிதனின் உடலுக்கு வாரம் ஒருநாளாகிலும் ஓய்வு கொடுங்கள். மனதின் புத்துணர்ச்சிக்கு சபை ஐக்கியம் கொள்ளுதலும் குடும்பத்தினருடன் இன்பமாய் நேரத்தை செலவிடுதலும் செய்யுங்கள்

ஓய்வு நாள் நமக்காகத்தான் உண்டாக்கப்பட்டது. தேவனுக்காக அல்ல

Share