எனக்கு பேர் உண்டாக செய்வேன்

Spread the Truth

மனிதன் இயல்பாகவே என் பெயர் புகழ் பெற வேண்டும் எனும் விருப்பமுடையவன். எல்லோரை காட்டிலும் நான் பெரிதாக காணப்பட வேண்டும் எனும் எண்ணம் இயல்பாகவே இருக்கும். ஆகையால் தான் அநேகர் தங்கள் பெயருக்காக அநேக முயற்சி மேற்கொள்கிறார்கள். இன்று Tiktok, Reels போன்றவற்றில் ஏதாவது செய்து வீடியோ போட காரணமும் எனக்கு பேர் உண்டாக செய்ய வேண்டும் எனும் எண்ணமே ஆகும்.

இந்த பெயர் புகழ் பெறணும் எனும் போதை, தவறு என்று நாம் பேசும் மொழிகளே நமக்கு உணர்த்துகின்றன.
ஆதிமுதல் மக்கள் ஒரே மொழி பேசுகிறவர்களாகத்தான் இருந்தார்கள். நோவாவின் கால அழிவுக்கு பின் பெருகின மக்கள் ஓரிடத்தில் கூடி தமக்கு பேர் உண்டாக வானளாவிய கோபுரம் கட்டும் பணி செய்கின்றனர். ஒட்டு மொத்த மக்களும் ஒரே சிந்தையுடையவர்களாய் தங்கள் பெயர் காலம் கடந்தும் நிலைத்து நிற்க வேண்டும் எனும் தற்புகழ்ச்சி எண்ணமுடையவர்களாய் கூடினர்.

(ஆதியாகமம் 11:4
பின்னும் அவர்கள்: நாம் பூமியின் மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்.)

அப்படியானால் என் புகழுக்காக என் பெயர் விளங்கத்தக்கதாக ஒரு விஷயத்தை செய்ய கூடாதென்றால் எந்த அடிப்படையில் செயல்கள் செய்ய வேண்டும் என்பீர்களாகில் இறைவனுடைய புகழ் விளங்குவதற்கேற்ப செய்ய வேண்டும் என்பேன்

(1 கொரிந்தியர் 10:31
ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.)

மட்டுமல்ல இறை நம்பிக்கையை அல்ல அதீத சுய நம்பிக்கையை உடையவர்களாய் இருந்தனர். நாங்கள் செய்ய நினைத்த ஒன்றும் தடைபடாது. இன்னொரு வகையில் சொல்ல வேண்டுமானால் எங்களை யாராலும் தடுக்க முடியாது ஏன் கடவுளால் கூட தடுக்க முடியாது எனும் பெருமை பிடித்த எண்ணம் காணப்பட்டது.

(ஆதியாகமம் 11:6
…தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள்.)

இதே வேளையில் இந்த சுய நம்பிக்கைக்கு எதிரான யோபுவின் இறை நம்பிக்கையை கவனிப்பது நலம்

(யோபு 42:2
தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.)

வித்தியாசத்தை கவனித்தீர்களா?

இதே வேளையில் சுய நம்பிக்கை குறித்த உலக மனிதராகிய திருவள்ளவர் எழுதிய குறள் கூறுவதற்கும் வேத சத்தியத்துக்கும் உள்ள வித்தியாசத்தை காண்பிக்க விரும்புகிறேன்

திருக்குறள் 619
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

(பொருள்: தெய்வத்தின் அருளாலே கைகூடாது போனாலும், ஒருவனுடைய முயற்சியானது, தன் உடல் வருத்தத்தின் கூலியைத் தப்பாமல் தந்துவிடும்)

நீதிமொழிகள் 3:5-6
உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,
உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.

இரண்டுக்கும் வித்தியாசம் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

நாங்கள் செய்ய நினைத்தது தடைபடாது என்ற எண்முடைய அன்றைய மக்களை போல தான் பெரும்பாலான மக்கள் இன்று உள்ளனர் தங்களிடம் உள்ள வளங்களின் அளவீட்டை பொறுத்து.

இன்று பல கிறிஸ்தவ ஆலயங்கள் கூட எங்கள் பெயர் விளங்க பண்ண வேண்டும் அல்லது பெயர் நிலைத்து நிற்க வேண்டும் என்ற நோக்கில் தான் கட்டப்படுகிறது. ஆகவே தான் 100 கோடி எனவும் இதுவரை யாரும் கட்டியிராத மாடல் எனவும் அவர்களால் தம்பட்டம் அடிக்க முடிகிறது. இது வெறும் ஆலயங்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு தனிமனிதனுடைய வாழ்விலும் கூட நடக்கலாம். நான் செய்யும் எந்த செயலும் என் பெயர் விளங்க செய்கிறேனா மற்றும் நான் எதை செய்ய நினைக்கிறேனோ அதை யாராலும் தடுக்க முடியாது என்ற எண்ணமுடையவனாயிருக்கிறேனா என சிந்தித்து பார்ப்பது நலம்.

உதாரணத்துக்கு ஒரு வீடு கட்டுகிறேன் அல்லது வாகனம் வாங்குகிறேன் என்றால் இந்த ஊரில் என் பெயர் விளங்கத்தக்கதாக செய்கிறேனா அல்லது என் தேவையின் அடிப்படையில் செய்கிறேனா என சிந்திப்பது அவசியம்.

அதுபோல என்னிடம் இவ்வளவு செல்வாக்கு இருக்கிறது அல்லது இவ்வளவு பணம் பொருள் சொத்து இருக்கிறது ஆகையால் நான் எதை எப்போ நினைத்தாலும் செய்ய முடியும் என்ற‌ எண்ணமுடையவனாயிருக்கிறேனா அல்லது தேவன் தான் சர்வ வல்லவர் அவர் செய்ய நினைத்தது மட்டுமே யாராலும் தடுக்க முடியாது. அவருடைய சித்தத்தை தான் நான் செய்ய வேண்டும் என்ற எண்ணமுடையவனாயிருக்கிறேனா என்று சிந்திப்பது அவசியம்.

எனது பெயர் விளங்க செய்யும் காரியமும் நான் நினைத்தை யாராலும் தடுக்க முடியாது எனும் எண்ணமும் தேவனுக்கு எதிரானவை.

ஆகையால் தான் இந்த எண்ணத்தின்படி செயல்பட்ட மக்கள் கட்டிய கோபுர வேலை தொடர்ந்து நடக்காதபடி தேவன் இறங்கி ஒரே மொழி பேசிய மக்களின் மொழிகளை தாறுமாறாக்கி பல மொழிகளாக்கி ஒருவர் பேசுவது பிறருக்கு புரியாதபடி செய்தார். தவறான எண்ணத்தோடு கூடியிருந்தவர்களை சிதறடித்தார்.

(ஆதியாகமம் 11:7-9
நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார். அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்; அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள். பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின் பேர் பாபேல் என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்.)

இன்று உலகில் உள்ள பல மொழிகளை காணும் நமக்கு இந்த உண்மைகள் எப்பொழுதும் நிலைத்திருக்க கடவது

1) என் பெயர் புகழுக்காக செய்வேன் என்பதல்ல தேவனுடைய நாம மகிமைக்காகவே செய்வேன் என்பதே
2) நான் நினைத்தது தடைபடாது என்பதல்ல தேவன் நினைத்தது தடைபடாது என்பதே

Share