இரட்சிப்பு இழக்க முடியுமா? முடியாதா?

Spread the Truth

இரட்சிப்பு இழக்க முடியுமா? முடியாதா?

இந்த கேள்விக்கு விடை அறிய இரட்சிப்பு என்றால் என்ன என்றறிதல் அவசியம்.

இரட்சிப்பு என்பது ஒரு பொருளல்ல ஒரு தேவ செயல். காப்பாற்ற‌படுதல் அல்லது விடுவிக்கப்படல் ஆகும்.

கிறிஸ்து எதிலிருந்து காப்பாற்றுகாறார் அல்லது விடுவிக்கிறார்?
பாவத்தின் தண்டனையிலிருந்து, பாவத்திலிருந்து, பாவ இடத்திலிருந்து

எப்போது விடுவிக்கிறார் அல்லது காப்பாற்றுகிறார் எனில்‌ இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும் போது காப்பாற்றி விட்டார் (past tence)

தீத்து 3:5
நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்மமுழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.(Past tence)

1 தீமோத்தேயு 1:15-16
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்.
அப்படியிருந்தும், நித்திய ஜீவனை அடையும்படி இனிமேல் இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்குத் திருஷ்டாந்தம் உண்டாகும்பொருட்டுப் பிரதான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம்பெற்றேன்.(past tence)

மேற்கூறியதில் பாவத்துக்கான தண்டனை அகற்றப்பட்டது. பாவத்திலிருந்து நாளுக்கு நாள் பரிசுத்தமாகுதல் எனும் செயல் வழி விடுதலையடைகிறோம். பாவம் சூழ்ந்துள்ள இடமே இல்லாத இடத்துக்கு இனி சேர போகிறோம்.

இதிலுள்ள நிகழ்கால எதிர்கால செயல்கள் கூட ஏற்கனவே 100% உறுதிபடுத்தப்பட்டதால் இரட்சிக்கபட்டோம் என இறந்த காலத்தில் சொல்கிறோம். ஆகவே தான் இரட்சிப்பு- மீட்பு குறித்து சில இடங்களில் நிகழ்கால எதிர்கால செயலாகவும் சொல்லப்பட்டிருக்கும்.

சரி ஒரு மனிதன் எப்படி இரட்சிக்கப்படுகிறான்?

தான் ஒரு பாவி என்று உணர்ந்து, பாவத்திலிருந்து விடுதலை பெற விரும்பம் இருந்து ஆனால் மனித மாம்சம் அந்த பாவத்துக்கு அடிமைப்பட்டு உள்ளதால் விரும்பினாலும் அதை நிறைவேற்ற முடியாது என்ற உண்மையை உணர்ந்து, இந்த பாவத்துக்கான தண்டனையை பெற்றுக்கொண்ட இயேசுவால் மட்டுமே விடுதலை தர முடியும் என்பதை உணர்ந்து என் பாவ விடுதலைக்காக இயேசு பலியாகி மரித்து, என்னை தேவனுக்கு ஏற்புடையவனாக்க உயிரோடு எழும்பினார் என்று மனப்பூர்வமாக (theoritical knowledge ஆக மாத்திரமல்ல) விசுவாசித்து ஏற்றுக்கொண்டால் அப்போது அவன் காப்பாற்றப்பட்டு விட்டான். மேலுள்ள உண்மையை விசுவாசிக்கும் போது கூடவே இயேசுவின் பலி மரணத்தின் போது எனக்கு என்ன நடந்தது என்பதையும் எண்ண வேண்டும்

(ரோமர் 6:6-8,10-11
நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம். மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனே கூடப்பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம். அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார். அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.)

இந்த அடிப்படையில் விசுவாசிப்பவன் தன் நிலை உணர்ந்தும் தேவனின் அன்பை புரிந்தும் பரிசுத்த ஆவியின் செயல் மூலமும் விசுவாசிப்பதால் அவன் தேவனால் பிறந்தவன் அல்லது மறுபடி பிறந்தவன் அல்லது காப்பாற்றப் பட்டவன் அல்லது விடுதலை பெற்றவன் எனும் நிலையை அடைகிறான். (Past tence)

இப்படி காப்பாற்றப்பட்டவன் காப்பாற்றபட்டதை இழப்பானா? கேள்வியே அர்த்தமற்றது தானே?

இப்படி காப்பாற்றப்பட்டவன் தன்னை யார் காப்பற்றியது என்பதையும் ஏன் காப்பாற்றப்பட்டேன் என்பதையும் அறிவான், மேலும் தான் காப்பாற்றப்பட்டதில் தன் கிரியை எதுவுமில்லை என்பதையும் முழுக்க முழுக்க கடவுளின் இரக்கம்- அருள் என்பதையும் அறிவான். இப்படியிருக்க இவன் எப்படி விரும்பி போய் பாவம் செய்ய முடியும்? இரட்சிப்பை இழக்க முடியும்?

ஒருவேளை பாவத்தில் விழ நேரிட்டாலும் பரிசுத்த ஆவியானவர் பரிசுத்த பாதையில் நடத்துகிறார். கிருபையினால் நாம் காப்பாற்றப்பட்டோம் என்பது உண்மையானால் கிருபை நம்மை போதித்து நடத்துகிறதும் உண்மை

தீத்து 2:11-13
ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க *தேவகிருபையானது* பிரசன்னமாகி, நாம் அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி, நாம் நம்பியிருக்கிற ஆனந்தபாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் *போதிக்கிறது.*

மேலும் தேவனால் தான் இரட்சிக்கப்பட்டேன் என்பவன் எப்படி அவரை துக்கப்படுத்த துணிவான். தேவனின் அன்பை புரிந்து கொண்டவனால் நான் பாவஞ்செய்து ஆவியானவர் துக்கப்படுத்தி விட கூடாது எனும் உணர்வுள்ளவனாகவே இருப்பான்.

ஆகையால் தான் காப்பாற்றப்பட்டவன் எக்காரணம் கொண்டும் மறுபடி கெட்டு போவதில்லை என்கிறார் இயேசு

யோவான் 10:27-29
என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் *ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை*, ஒருவனும் அவைகளை என் *கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதுமில்லை.*
அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் *பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.*)

இங்கே இரட்சிக்கப்பட்டவனை யாராலும் தேவனிடமிருந்து பறிக்க‌ முடியாதென்று‌ பார்க்கிறோம்.

அதே போல எந்த செயலாலும் தேவனின் அன்பை விட்டு பிரிக்க முடியாதென்று பவுல் சொல்கிறார்

(ரோமர் 8:36-39
கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ, இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு *நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்*)

இங்கே எந்த செயலாலும் இரட்சிப்பு இழக்க முடியாது என்பதை நிச்சயம் என்ற வார்த்தையை பயன்படுத்தி உறுதிபடுத்துகிறார்.

ஆகையால் இரட்சிக்கப்பட்டவர்கள் அதை இழக்க முடியுமா எனும் கேள்வி அர்த்தமற்றது. இரட்சிக்கப்பட்டிருக்கிறாயா எனும் கேள்வியே சரியானது.

அப்படியானால் ஒரு முறை இரட்சிக்கப்பட்டவர்கள் என்னதான் பாவம் செய்தாலும் அதை இழக்க முடியாதா என்ற கேள்வி சிலருக்கு வரும்.

இந்த கேள்வி ஒரு அர்த்தமற்ற கேள்வி. முதலில் இரட்சிக்கப்பட்டவர்கள் யார்? எப்படிப்பட்ட மாற்றத்தினூடாக இரட்சிக்கப்பட்டார்கள் என மேலே சொன்ன சத்தியத்தை உணர்ந்தால் இந்த கேள்வியே வராது.

இரட்சிக்கப்பட்டவன் தன்னை பாவத்துக்கு மரித்தவனாக எண்ணிக்கொண்டு வாழ்பவன்.
ஆகையால்
ரோமர் 6:2
பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்?

அதையும் மீறி சிலரை உதாரணம் காட்டி இவன் இரட்சிக்கப்பட்டவன் ஆனால்‌ இப்போது எந்த உணர்வும் இன்றி பாவத்தில் தான் வாழ்கிறான். அப்படியாயின் அவன் இரட்சிப்பை இழக்க முடியாதா? என கேட்டால்

பாவத்தில் வாழ்பவன் இரட்சிப்பை இழக்க முடியும் என்ற முடிவுக்கல்ல அவன் இரட்சிப்பை பெறவே இல்லை என்ற முடிவுக்கு தான் வரணும். அதை தான் யோவான் சொல்கிறார்

(1 யோவான் 3:8-10
பாவஞ்செய்கிறவன்*(பாவத்தில் நிலைத்திருப்பவன்)* பிசாசினாலுண்டாயிருக்கிறான்;*(தேவனால் இரட்சிக்கப்படவில்லை)* ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். தேவனால் பிறந்த எவனும்*(இரட்சிக்கப்பட்ட எவனும்)* பாவஞ்செய்யான் *(பாவத்தில் நிலைத்திரான்)*, ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான் *(பாவத்தில் நிலைத்திருக்கமாட்டான்)*.
இதினாலே தேவனுடைய பிள்ளைகள் *(இரட்சிக்கப்பட்டவன்)* இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் *(இரட்சிக்கப்படாதவன்)* இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல *(இரட்சிக்கப்பட்டவனல்ல)*

:-குறிப்பு மேலே சில வார்த்தைகளை புரிதலுக்காக இணைத்துள்ளேன். இந்த இடத்தில் பாவஞ்செய்தல் என்ற வார்த்தைக்கு யோவான் மூல மொழியில் *பாவத்தில் நிலைத்திருத்தல்* அல்லது *தொடர்ந்து பாவஞ்செய்தல்* எனும் வார்த்தையை தான் பயன்படுத்தியுள்ளார்

இங்கே இரட்சிக்கப்பட்டவர்கள் பாவஞ்செய்யமாட்டான் (பாவத்தில் நிலைத்திரான்) என எழுதிய அதே யோவான் இரட்சிக்கப்பட்டவர்கள் பாவம் செய்வார்கள் எனவும் எழுதியுள்ளார். அப்படி பாவம் செய்யும் போது என்ன நடக்கும் என்பதையும் எழுதியுள்ளார்

(1 யோவான் 2:1
என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் *பாவஞ்செய்வானானால்* நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.)

:- இங்கே பாவஞ்செய்தல் என்பதற்கு பாவத்தில் நிலைத்திருந்தல் என்ற வார்த்தை அல்ல

இரட்சிக்கப்பட்டவன் பாவஞ்செய்தால் இயேசு பிதாவிடம் பரிந்து பேசுகிறார். இதை இரட்சிக்கப்பட்டவன் தான் பாவம் செய்வதற்கு சாதகமாக எடுத்துக்கொள்ளமாட்டான். காரணம் இதை பாவம் செய்யாதபடிக்கு தான் யோவான் எழுதுகிறார். அதாவது நான் பாவம் செய்வதால் இயேசுவை எனக்காக பிதாவிடம் பரிந்து பேசும் இக்கட்டான நிலைக்கு தள்ளுகிறேனே. அவரை துக்கப்படுத்துகிறேனே என்றெண்ணுவான்.

யாராகிலும் ஒருவர் நான் பாவம் செய்தால் இயேசு எனக்காக பிதாவிடம் பரிந்து பேசுவார் எனக்கு பிரச்சனை இல்லை ஆகையால் எவ்வளவு வேண்டுமானாலும் பாவம் செய்யலாம் என நினைத்தால் அவன் இரட்சிக்கபடவில்லை என்றுதான் அர்த்தமே தவிர மக்கள் இப்படி நினைப்பார்கள் என்பதற்காக சத்தியத்தை மாற்றி பேச முடியாதே

இரட்சிப்பை இழக்க முடியும் என  போதிப்போரின் பயம் மேற்கூறியது போன்றதே. என்ன ஆனாலும் இரட்சிப்பு இழக்க முடியாது என போதித்தால் இரட்சிக்கப்பட்டவர்கள் துணிந்து பாவம் செய்து விடுவார்களே என்ற பயம். இது தேவையற்ற பயம். காரணம்  இரட்சிப்பை இழந்து விடுவோமோ நரகம் போய் விடுவோமோ என்ற பயத்தினால் பாவம் செய்வதை தவிர்ப்பவனின் உள்ளுக்குள் பாவம் செய்யும் ஆசை உள்ளது. இரட்சிப்பை இழக்க முடியாது எனும் சத்தியம் கேட்டும் ஒருவன் பாவம் செய்யாமல் வாழ்வது தான் உண்மையான இரட்சிப்பு. இந்த சத்தியம் கேட்டு ஒருவன் பாவம் செய்கிறான் எனில் அவன் உண்மையில் இரட்சிக்கப்படவில்லை. இவ்வளவு நாட்கள் ஏதோ பயத்தின் காரணமாக பாவம் செய்யாமல் வாழ்ந்திருக்கிறார் என்பதே உண்மை

இங்கே எவ்வளவு பாவம் செய்தாலும் இரட்சிப்பை இழக்க முடியாதா எனும் கேள்விக்கு பதில் சொல்லும் சிலர் செய்யும் தவறு என்னவென்றால்

இந்த கேள்வியே தவறு இரட்சிக்கப்பட்டவனால் பாவத்தில் நிலைத்திருக்க முடியாது. பாவத்தில் விழ நேரிட்டாலும் தேவ உதவியோடே உடனே எழும்புவான், என்று சொல்வதை விட்டுவிட்டு எவ்வளவுதான் பாவஞ்செய்தாலும் இரட்சிப்பை இழக்க முடியாது என்று வாதத்தில் வெற்றிபெற பேச நினைப்பது தவறு. பாவத்தில் நிலைத்திருக்க முடியாது என வேதம் கூறினால் அதோடு நிறுத்த வேண்டும். மறுபடியும் ஒருவேளை தொடர்ந்து பாவஞ்செய்தால் என தொடர கூடாது.

*இரட்சிப்பை இழக்க முடியாது எனும் உபதேசம் பாவம் செய்ய தூண்டுகிற உபதேசமா?*

யூதாஸ் என்ற மனிதனை நம் முன் நிறுத்தினால் சிலர் சொல்வார்கள் யூதாஸ் இரட்சிப்பை இழந்தான் என்று. சிலர் சொல்வார்கள் யூதாஸ் இரட்சிக்கப்படவேயில்லை என்று.

இதில் ஏதோ ஒன்று தான் நிஜம். இதில் இரட்சிப்பை இழக்க முடியும் என்றவர்களின் குற்றச்சாட்டு அர்த்தமற்றதாக உள்ளது.

காரணம் யூதாஸ் இரட்சிக்கப்பட்டு அதன்பின் பெரும் பாவம் செய்தும் இரட்சிப்பை இழக்கவில்லை என்று போதித்திருந்தால் அதை குற்றச்சாட்டாக எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் எல்லாரையும் பாவம் செய்ய தூண்டுகிறீர்கள் என சொல்லலாம். ஆனால் பாவம் செய்து மாண்டு போன யூதாஸை இரட்சிக்கப்படவே இல்லை என்று சொல்லும் போது அது எப்படி பாவம் செய்ய தூண்டும் உபதேசம் ஆகும்.

இரட்சிப்பை இழக்க முடியும் எனும் உபதேசம் யூதாசை பார்த்து யூதாசே ஒழுங்கா இரு இல்லையென்றால் இரட்சிப்பை இழந்து விடுவாய் என கூறும் உபதேசம்.

இரட்சிப்பை இழக்க முடியாது எனும் உபதேசம் யூதாசை பார்த்து யூதாசே உன் செயல்களை பார்த்தால் இரட்சிக்கப்பட்டதாக தோன்றவில்லை. ஆகவே நீங்கள் விசுவாசமுள்ளவர்களோ அல்லவோ என்று சோதித்து பாருங்கள் என சொல்லும் உபதேசம்.

ஆகவே தான் பவுல் கொரிந்து சபை மக்களை பொதுவாக பரிசுத்தவான்களே என அழைத்தாலும் அதன்பின் சிலரது நடக்கையை பார்த்து நீங்கள் ஆவிக்குரியவர்கள் (இரட்சிக்கப்பட்டவர்கள்) என்று அல்ல மாம்சத்துக்குரியவர்கள் (இரட்சிக்கப்படாதவர்கள்) என்று அல்லது இப்போது தான் இரட்சிக்கப்பட்ட வளராத குழந்தைகள் என்று கருதி பேசுகிறேன் என்கிறார்.

சபைக்குள் இருக்கிற எல்லாரையும் இரட்சிக்கப்பட்டதாக நாம் நினைத்தாலும் எல்லாரும் இரட்சிக்கப்பட்டிருக்க அவசியமில்லை. அப்போஸ்தலர்களுக்கே சபையில் இருக்கிறதில் யார் இரட்சிக்கப்பட்டது அல்லது இரட்சிக்கப்படாதது என்று தெரியவில்லை. எப்போது தெரிந்தது என்றால் கிறிஸ்துவை விட்டு பின்வாங்கி தவறான உபதேசத்தை பற்றி சென்றபோது தான் தெரிந்தது ஓ இவர்கள் இரட்சிக்கப்படவே இல்லை என்று. இப்படிப்பட்டவர்களை இரட்சிப்பை இழந்தனர் என  இரட்சிப்பை இழக்க முடியும் என சொல்பவர்கள் நம்புவார்கள். ஆனால் அப்போஸ்தலர்கள் அவர்களை இரட்சிப்பை இழந்ததாக நம்பவில்லை. ஆதிமுதலே இரட்சிப்பை பெறவேயில்லை என கூறினார்கள்.

அப்போஸ்தலன் யோவன் சொல்கிறது பாருங்கள்.

1 யோவான் 2:19
அவர்கள் *(அந்தி கிறிஸ்துக்கள்)* நம்மைவிட்டுப் பிரிந்துபோனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை *(நம்மை போல இரட்சிக்கப்பட்டிருக்கவில்லை)*; நம்முடையவர்களாயிருந்தார்களானால் *(இரட்சிக்கப்பட்டிருந்தால்) நம்முடனே *நிலைத்திருப்பார்களே*; எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று *(நம்மை போல இரட்சிக்கப்பட்டவர்கள் அல்லவென்று)* வெளியாகும்படிக்கே பிரிந்து போனார்கள்.

இங்கே யோவானுக்கே அவர்கள் பிரிந்து போய் அந்தி கிறிஸ்துக்களாய் மாறின பின் தான் தெரிந்தது அவர்கள் இரட்சிக்கப்படவேல்லை என்று. ஆனால் இரட்சிப்பை இழக்க முடியும் என்பவர்கள் என்ன சொல்வார்கள் அவர்கள் இரட்சிக்கப்பட்டிருந்தார்கள் அதன் பின் அந்தி கிறிஸ்துக்களாய் மாறினதால் இழந்தார்கள் என்று.

இதே போல தான் யூதாஸ் இயேசுவை காட்டிகொடுத்ததால் இரட்சிப்பை இழந்தான் என்பார்கள். ஆனால் இயேசு அதற்கு முன்பே அவன் இரட்சிக்கபடவேயில்லை என்பதை அறிந்திருந்தார்.

(யோவான் 6:64-65
ஆகிலும் உங்களில் *விசுவாசியாதவர்கள் சிலர் உண்டு* என்றார்; விசுவாசியாதவர்கள் இன்னாரென்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இன்னானென்றும் ஆதிமுதலாக இயேசு அறிந்திருந்தபடியால், அவர் பின்னும்: ஒருவன் என் பிதாவின் *அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான்* என்று இதினிமித்தமே உங்களுக்குச் சொன்னேன் என்றார்.)

இங்கே இயேசு யூதாசை குறித்து அவரை விசுவாசியாதவன் என்றும் பிதாவின் அருள்(கிருபை) பெறாதவன் என்றும் கூறுவதன் மூலம் இரட்சிக்கப்படாதவன் என சுட்டிக்காட்டுகிறார்.

மேலும்
யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான் எனும் வசனம் எழுதப்படும் பல காலத்துக்கு முன்னே யூதாஸு பிசாசாயிருப்பான் என கூறாமால் ஏற்கனவே பிசாசாயிருக்கிறான் என்றே கூறுகிறார்.

யோவான் 6:70-71
இயேசு அவர்களை நோக்கி: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா உங்களுக்குள்ளும் ஒருவன் *பிசாசாயிருக்கிறான்* என்றார்.
சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து பன்னிருவரிலொருவனாயிருந்தும், தம்மைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனாயிருந்தபடியினால் அவனைக் குறித்து இப்படிச் சொன்னார்.)

மேலும் இரட்சிக்கப்பட்டவன் கெட்டு போனான் என கூறாமல் கேட்டின் மகன் (இரட்சிக்கப்படாதவன்) கெட்டு போனான் என்றே கூறுகிறார். மேலும் பிதா இயேசுவுக்கு கொடுத்த‌ ஒருவரும் (இரட்சிக்கப்பட்ட ஒருவரும்) கெட்டு போகவுமில்லை என்கிறார்

(யோவான் 17:12
நான் அவர்களுடனேகூட உலகத்திலிருக்கையில் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக்கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, *கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை.*)

இன்றைய உதாரணங்கள்படி

மோகன் சி போன்றோரை இரட்சிக்கப்பட்டு அதன்பின் இழந்துள்ளார் என நம்புகிறது ஒரு குழு

மோகன் சி இரட்சிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என நம்புகிறது இன்னொரு குழு.

அதாவது இரட்சிப்புக்கேற்ற கனிகள் வெளிப்படாமல் மாம்ச கிரியைகளை வெளிப்படுத்துவோரை இரட்சிப்பை இழந்து விடுவாய்‌ என்கிறது ஒரு குழு – இரட்சிப்பை இழக்க முடியும் எனும் குழு

இரட்சிப்புக்கேற்ற கனிகள் வெளிப்படாமல் மாம்ச கிரியைகளை வெளிப்படுத்துவோரை இரட்சிக்கப்பட்டாயா என சந்தேகத்தை எழுப்பி சோதித்து பார் என்கிறது இன்னொரு குழு. -இரட்சிப்பை இழக்க முடியாது எனும் குழு

இப்படி இருக்க இரட்சிப்பை இழக்க முடியாது எனும் உபதேசம் பாவம் செய்ய தூண்டும் உபதேசம் என்பது எவ்வளவு அபத்தம்.

பொதுவான சபையில் பேசும் போது எல்லாரையும் இரட்சிக்கப்பட்டவர்களாக நாம் கருதினாலும், உண்மையில் இரட்சிக்கப்படாமல் இரட்சிக்கப்பட்டதாக நினைத்து கொண்டிருப்போரும் இருக்க கூடும் என்பதை மனதில் வைத்தே பேச வேண்டும்.

Share