
ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் களுக்கு உண்டு என பவுல் கலாத்தியருக்கு எழுதினது தான் எழுதினார் அதன் பொருளை சரியாக அறியாமல் ஆபிரகாம் சீமானாயிருந்தது தான் ஆசீர்வாதம் என பலர் நினைத்து ஆபிரகாமை போல பணக்காரானக வேண்டும் என விரும்புகின்றனர்.
(ஆதியாகமம் 13:2
ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமானாயிருந்தான்.)
உண்மையில் பவுல் விசுவாசத்தால் நீதிமானாக்கப்படுவதை தான் ஆபிரகாமின் ஆசீர்வாதம் என கூறியிருப்பார்
(கலாத்தியர் 3:8-9,11,14
மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது.
அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.
நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.
ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று.)
சரி ஆபிரகாம் எப்படி சீமானானான் என பார்ப்போமா?
ஆபிராமை தேவன் அழைத்தார். ஆபிராம் தன் 75வது வயதில் அழைப்புக்கு கீழ்படிந்து புறப்பட்டார். எங்கே போகிறோமென்று கிளம்பும் போது ஆபிராமுக்கு தெரியாது. ஆனாலும் தேவனை நம்பி புறப்பட்டார். புறப்படும்போது தான் ஏற்கனவே சம்பாதித்த செல்வங்களையெல்லாம் கொண்டுதான் வருகிறாரேயன்றி வெறுங்கையாய் வரவில்லை. ஏற்கனவே சம்பாதித்த பொருட்கள் ஆபிராம் விக்கிரக வழிபாட்டில் இருக்கும் போது சம்பாதித்தவை. ஆபிரகாமை போல பணக்காரனாக வேண்டும் என்பவர்கள் நன்றாக கவனியுங்கள்
(ஆதியாகமம் 12:5
ஆபிராம் தன் மனைவியாகிய சாராயையும், தன் சகோதரனுடைய குமாரனாகிய லோத்தையும், தாங்கள் சம்பாதித்திருந்த தங்கள் சம்பத்தெல்லாவற்றையும், ஆரானிலே சவதரித்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, அவர்கள் கானான் தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், கானான் தேசத்தில் சேர்ந்தார்கள்.)
ஆபிராம் கானான் நாட்டில் மோரே எனும் பகுதிக்கு வந்து சேர்ந்தான். இதுதான் உன் சந்ததிக்கு நான் கொடுக்கும் தேசம் என்று ஆண்டவர் தரிசனமாகி சொன்னார். உடனே ஆபிராம் அங்கேதானே ஒரு பலிபீடம் கட்டி தேவனை தொழுது கொண்டான்.(ஆதி12:7)
சில நாள் கழித்து ஆபிராமுக்கு ஒரே இடத்தில் தொழுது கொள்வது சலிப்பு ஏற்படுத்தியதோ என்னவோ அங்கிருந்து கிளம்பி இன்னொரு இடத்தில் பலிபீடம் கட்டி தொழ ஆரம்பித்தான். (ஆதி12:8)
மேலும் சில நாள் கழித்து அந்த இடமும் சலிப்பு தட்டியதோ என்னவோ அங்கிருந்தும் கிளம்பி தெற்கு நோக்கி பயணித்து தற்கு நாட்டுக்கே சென்றுவிட்டார். அதாவது ஆண்டவர் காண்பித்த கானான் நாட்டைவிட்டு நெகேவ் எனப்படும் தெற்கு நாட்டுக்கு சென்று விட்டான். கானான் தேசத்துக்குள்ளேயே இடம் விட்டு இடம் மாறும்போது கடவுளை தொழுத ஆபிராமால் நாடு விட்டு நாடு மாறிய போது பலிபீடம் கட்டி தேவனை தொழ முடியவில்லை. (ஆதி 12:9,10)
ஆபிராம் தெற்கு நாட்டில் இருக்கையில் கொடிய பஞ்சம் வந்தது. தற்போது ஆபிராம் விட்டு வந்த கானான் தேசத்துக்கு திரும்பி சென்றிருக்க வேண்டும். ஆனால் ஆபிராம் மறுபடியும் தென் திசையில் பயணித்து எகிப்து நாட்டுக்கு செல்கிறார். காரணம் ஆண்டவர் கொடுத்த கானானை விட ஆபிராமின் பார்வைக்கு எகிப்து தான் செழிப்பாக இருந்தது. (ஆதி12:10)
ஆபிராம் எகிப்துக்கு செல்வதற்குமுன் அவனுக்கு எகிப்து மக்களை பற்றி ‘அங்குள்ளவர்கள் அழகான பெண்ணை கண்டால் அந்த பெண்ணுக்கு திருமணமே ஆகியிருந்தாலும் புருஷனை கொன்றாகிலும் அந்த பெண்ணை அடைவார்கள்’ என்று அறிந்திருந்தான். அங்கே சென்றால் இப்படி ஓரு ஆபத்து இருப்பது தெரிந்தும் ஆபிராம் எகிப்துக்கு செல்ல காரணம் எகிப்தின் செழிப்பு. ஆபிராம் மனைவி சாராயிடத்தில் தன்னை புருஷன் என சொல்லாதே சகோதரன் என சொல் என சொல்லியிருந்தான். தற்போது சாராயின் அழகில் மயங்கும் யாராகிலும் சாராயை மட்டும் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் ஆபிராமை அவள் புருஷன் என அறியாததால் சகோதரன் தானே என எண்ணி கொல்லமாட்டார்கள். என்ன ஒரு ராஜதந்திரம். (ஆதி12:11-13)
இங்கேயும் குறிப்பிட வேண்டிய காரியம், கானான் தேசத்தில் இருந்தது போல கடவுளை தொழுது கொள்ளும் வழக்கத்தை ஆபிராம் அடியோடு மறந்திருந்தான்.
ஆபிராம் நினைத்தபடி எகிப்து ஆண்கள் சாராயின் அழகில் மயங்கினர். அவளது அழகை குறித்த புகழ்ச்சி எகிப்தின் பார்வோன் வரை சென்றது. பார்வோனும் சாராயை அடைய நினைத்து அரண்மனைக்கு கொண்டு வந்தான். சாராய்க்கு பதிலாக ஆபிராமுக்கு ஏராளமான செல்வங்கள் கிடைக்கிறது. இப்பொழுதாகிலும் ஆபிராம் உண்மையை சொல்லி மனைவியை காப்பாற்ற எண்ணியிருக்க வேண்டும். மாறாக மனைவியை பார்வோனோடு அனுப்பி வைத்து விட்டு பதிலுக்கு பார்வோன் கொடுத்த செல்வ செழிப்பை பெற்றுக்கொண்டான் ஆபிராம். (ஆதி12:16)
2013 ம் ஆண்டு வந்த ஒரு செய்தி ஞாபகத்துக்கு வந்தது. பதவி உயர்வுக்காக மனைவியை உயர் அதிகாரிகளுக்கு விருந்தாக்கிய கணவன். <-click for that news
ஆபிரகாமை போல பணக்காரானக விரும்புகிறவர்கள் ஆபிரகாமுக்கு எப்படி அந்த செழிப்பு கிடைத்தது என்றும் அறிவது நல்லது.
ஆபிரகாம் செழிப்பு மேல் கண் வைத்த போது முதலில் தேவனை மறந்தான். தற்போது மனைவியையும் கொடுத்தான்.
ஆபிராம் உணர்வற்று இருந்தாலும் தேவன் ஆபிராமை தெரிந்து கொண்டதால் ஆபிராமுக்கு உணர்வுண்டாக்கி திரும்ப பழைய கானானுக்கே அழைத்து வர விரும்புகிறார். இதற்காக ஆண்டவர் ஆபிராமோடு முன் போல நேரடியாக பேசவில்லை. மாறாக பார்வோனை கொண்டு பேச வைக்கிறார். பார்வோனுக்கு சில சிக்கல்களை கொடுத்து உண்மை அறிய செய்து பார்வோனை கொண்டு ஆபிராமுக்கு கட்டளை கொடுக்கிறார். (ஆதி12:19)
“உன் மனைவியையும் கூட்டி கொண்டு போ” என்பதே அந்த கட்டளை. இது பார்வோனின் கட்டளையாக இருந்தாலும் இதை சொல்ல வைத்தவர் தேவன். ஆம் ஆபிராம் செழிப்புக்காக எகிப்தில் இருப்பது தேவ சித்தம் அல்ல, மாறாக தேவன் கொடுத்த கானானில் வசிப்பது தான் தேவ சித்தம்.
ஆபிராம் அந்த கட்டளைக்கு கீழ்படிந்து கானான் தேசத்துக்கு திரும்புகிறார். தற்போது பார்வோன் கொடுத்த செல்வங்களும் ஏற்கனவே பழைய விக்கிரக ஆராதனை காரனாக இருந்த போது சம்பாதித்திருந்த செல்வங்களும் சேர்ந்து ஆபிராமிடம் பெரும் செல்வம் இருந்தது.
(ஆதியாகமம் 13:1-2
ஆபிராமும், அவன் மனைவியும், அவனுக்கு உண்டான யாவும், அவனுடனே லோத்தும், எகிப்தை விட்டு, தென்திசையில் வந்தார்கள்.
ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமானாயிருந்தான்.)
ஆபிராம் கானானில் தேவன் முதலில் பேசிய இடமாகிய மோரே எனும் இடத்துக்கு வந்தான். தற்போது அங்கே தான் ஏற்கனவே கட்டியிருந்த பலிபீடத்தில் தேவனை தொழுது கொண்டான் (ஆதி13:4). சில ஆண்டுகள் முறிந்திருந்த தேவ உறவு மறுபடி மலர காரணம் திரும்பி வந்ததே. இளைய குமாரன் தகப்பனிடம் திரும்பி வந்ததால் தான் மரித்திருந்த உறவு புத்துயிர் பெற்றது என்று நமக்கு தெரியும் அல்லவா!
உலக கவர்ச்சி தான் நம்மை (ஆபிராமை) தேவனை விட்டு பிரித்தது. தேவனை விட்டு மட்டுமல்ல உலக கவர்ச்சி, பொருளாசை பல வேளைகளில் குடும்ப உறவுகளையும் உதறி தள்ள வைக்கும் (ஆபிராம் தன் மனைவிக்கு பதில் செல்வம் பெற்றானே). மறுபடியும் உலக கவர்ச்சியை, சுய ஆசையை விட்டு திரும்பி வரும்போது தேவனோடு நம்மை இணைக்கிறது. குடும்பத்துக்கும் நன்மை பயக்கிறது.
ஆபிராம் தேவனோடு ஒப்புரவாகி தேவனை தொழுது கொண்டாலும் தேவன் உடனடியாக ஆபிராமோடு பேசவில்லை. ஆபிராமின் மனமாற்றத்தை உறுதிசெய்ய ஆண்டவர் ஒரு சோதனை வைக்கிறார். ஆபிராம் மற்றும் லோத்து பிரிந்து செல்ல கூடிய சூழல் அவர்களது வேலைக்காரர் மூலம் உருவான போது, ஆபிராம் மிகவும் செழிப்பான அதாவது ஏதேன் தோட்டத்தை போல, எகிப்தை போல செழிப்பான சோதோம் கொமேராவை தேர்ந்தெடுக்காமல் அதை லோத்துவுக்கு விட்டு கொடுத்தான். இதிலிருந்து பழையதுபோல செழிப்பை தேடி ஓடும் எண்ணம் ஆபிராமிடம் ஒழிந்து சகோதர பாசத்தை பேணும் எண்ணம் பெருகியிருப்பதை அறியலாம். இந்த சோதனையில் தன்னை நிருபித்த உடனே தேவன் மறுபடி ஆபிராமுடன் பேச ஆரம்பிக்கிறார். (ஆதி13:14)
நான் மனந்திரும்பினவன் என்பதை நமக்கு நிரூபித்து காட்டுவது நமக்கு ஏற்படுகிற சோதனையை மேற்கொண்டு நாம் வெற்றி பெறுவதே.
உலக கவர்ச்சி யில் சிக்கி கொள்ளும் சூழல் அதற்கேற்ற போதனைகள் பெருகியிருக்கிற இக்காலத்தில் அதில் சிக்கி தேவ உறவையும் குடும்ப உறவையும் இழக்காமல் தேவ அன்பில் நிலைத்திருப்போம்.
ஒருவேளை உலக கவர்ச்சியில் சிக்கி தேவ உறவையோ குடும்ப உறவையோ இழந்திருந்தால் மனந்திரும்பி வாருங்கள். ஆண்டவரும் உதவி செய்வார். இழந்த தேவ உறவை மலர செய்ய ஆவலாய் காத்திருக்கிறார்.