அந்நியபாஷை -பெந்தேகோஸ்தே பொய்கள்

Spread the Truth

அந்நியபாஷை கடவுளிடம் தனியாக இரகசியம் பேச வேண்டிய பரலோக மொழி அல்ல

கடவுளுக்கு தெரியாத இரகசியம் இல்லையே. அவர் இருதயத்தில் உள்ளதையே அறிகிறார். கடவுளுக்கு சொல்லி கொடுக்கும் அளவுக்கு என்ன இரகசியம் இருக்கிறது. மேலும் கடவுளோடு யாருக்கும் தெரியாமல் பேசும் இரகசியம் எனில் அதை சபை மக்களுக்கு ஏன் அர்த்தம் சொல்ல சொல்கிறார். இதுவே முரண்பாடாக தெரியவில்லையா?

சரி கடவுளுக்கு இரகசியம் சொல்வதாகவே கொண்டாலும் இரகசியத்தை சொல்லி கொடுப்பவருக்கு தான் என்ன சொல்லி கொடுக்கிறோம் என தெரிய வேண்டும் அல்லவா? ஆனால் இங்கே யாருக்கும் தெரிவதில்லையே! ஆகவே அந்நியபாஷை கடவுளோடு இரகசியம் பேச உருவாக்கப்பட்ட பாஷை அல்ல. அது பூமியில் உள்ள வேறு வேறு மொழிகள்

அது ஆதி சபை உருவாகுகையில் சபைக்கான உபதேசங்கள், அதுவரைக்கும் மக்களுக்கு மறைக்கப்பட்ட இரகசியங்கள் (சத்தியம்) ஸ்தாபிக்கப்படுவதற்காக தேவனால் கொடுக்கப்பட்ட பலவித வரங்களில் ஒன்று

அப்படியானால் கீழுள்ள வசனங்கள் என்ன என கேள்வி ஏழலாம்.

(1 கொரிந்தியர் 14:2

ஏனெனில், அந்நிய பாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.)


இங்கே அந்நிய பாஷையில் பேசுகிறவன் கடவுளோடு இரகசியம் பேசுகிறான் என சொல்லப்படவில்லை. அது இந்த வசனத்தை தவறாக விளங்கியதன் விளைவே.

கொரிந்து சபைபில் அவர்களுடைய மொழியில் பேசினால் தான் அங்கு உள்ளவர்களுக்கு புரியும். ஆனால் அந்நியபாஷை (அரபி, பம்பிலியா, பாபிலோனிய போன்ற மொழிகள்) வரம் பெற்ற சிலர் மற்றவர்களுக்கு புரிகிறதா இல்லையா என்ற அக்கரையின்றி வேறு மொழிகளை பேசுவதை மேன்மை பாராட்டினர். ஆகவே தான் பவுல் சொல்கிறார் இப்படி சபை மக்களுக்கு புரியாத அந்நிய பாஷையில் இதுவரை வெளிப்படாத இரகசியங்களை கடவுள் உங்களுக்கு வெளிப்படுத்தி தந்து நீங்கள் பேசினாலும் யாருக்கும் புரிய போவதில்லை. இரகசியங்களை சொல்லி தந்த கடவுளுக்கு மட்டுமே புரியும். ஆகவே சொல்லி தந்த கடவுளிடமே திருப்பி சொல்வது போலாகும். இதனால் யாருக்கும் பயன் இல்லை. பேசிய நபருக்கு மட்டுமே பயன். காரணம் ஆண்டவர் சொல்லி கொடுத்ததை மக்களுக்கு புரியும் படி சொல்லி கொடுக்காததால்.

இதை தான் பவுல் அங்கே சொல்ல வருகிறார்.

இரகசியம் என்பது மனிதன் கடவுளுக்கு சொல்வதல்ல கடவுள் மனிதனுக்கு வெளிப்படுத்துவது

புரிந்து கொள்ள. பவுலுக்கு ஒரு இரகசியம் வெளிப்படுத்தப்பட்டது.

(1 கொரிந்தியர் 15:51

இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.)

இந்த இரகசியத்தை பவுல் அவர்கள் சொந்த மொழியில் சொல்லாமல் அரபி மொழியில் பேசினால் அங்குள்ள யாருக்கும் பிரயோஜனமில்லை. பவுலுக்கு மட்டுமே பிரயோஜனமாயிருந்திருக்கும். அங்குள்ள யாருக்கும் புரியாததினால் பவுல் அங்குள்ள யாரிடமும் பேசாமல் அந்த இரகசியத்தை வெளிப்படுத்தின கடவுளிடமே பேசினதாகி விடும். இது சரியான செயலா? இல்லை. இதை தான் பவுல் அங்கே சொல்கிறார்

சுவிசேஷம் கூட இரகசியம் தான் (எபே6:20)

உதாரணத்துக்கு தமிழ் தெரிந்த உங்களிடம் நான் வந்து தமிழில் சுவிசேஷம் சொல்லாமல் அரபி மொழியில் பேசினால் அது சரியா? அப்படியானால் பவுல் என்னை எப்படி கண்டிப்பார்

1 கொரிந்தியர் 14:2

அந்நிய பாஷையில் (அரபி பாஷை) பேசுகிற நீ, ஆவியினாலே சுவிசேஷத்தை (இரகசியங்களைப்) பேசினாலும், நீ பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, நீ மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறாய்.

1 கொரிந்தியர் 14:4

அந்நியப்பாஷையில் (அரபி பாஷை) பேசுகிற நீ உனக்கே பக்திவிருத்தி உண்டாகப்பேசுகிறாய்; (உனக்கு தெரிந்த சுவிசேஷம் உனக்கு மட்டுமே பயன்படுவதால்) (selfish) தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ (தமிழ் மொழியில் பேசுவதால்) சபைக்கு பக்திவிருத்தி உண்டாகப்பேசுகிறான்.

இது பாராட்டு அல்ல இகழ்ச்சி.

இது புரியாமல் இந்த வசனத்தை வைத்து தவறாக போதித்து அநேகரை உளற வைத்து விட்டார்கள்

அந்நியபாஷை வரம் மட்டுமல்ல வேறு சில வரங்களும் ஆதியில் உபதேசத்தை ஸ்தாபிப்பதற்காக அடையாளமாக கொடுக்கப்பட்டது.

அந்நியபாஷை வரத்தை பொறுத்தவரை பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டபடி பல விதங்களில் நிருபித்து காண்பித்தும் இயேசுவை விசுவாசியாத யூதர்களுக்கு அடையாளமாக கொடுக்கப்பட்டதாக பவுலே தெளிவாக சொல்கிறார்.

(1 கொரிந்தியர் 14:22

அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது; தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது.)

இதை பவுல் ஏசாயா புஸ்தக மேற்கோளின் அடிப்படையில் எழுதுகிறார்

(1 கொரிந்தியர் 14:21

மறுபாஷைக்காரராலும், மறுவுதடுகளாலும் இந்த ஜனங்களிடத்தில் பேசுவேன்; ஆகிலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே.)

அப்படியானால் ஏசாயா எழுதிய இடத்தில் சென்று பார்ப்போம்.

(ஏசாயா 28:7-8

ஆனாலும் இவர்களும் திராட்சரசத்தால் மயங்கி, மதுபானத்தால் வழிதப்பிப்போகிறார்கள்; ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி, திராட்சரசத்தால் விழுங்கப்பட்டு, சாராயத்தினால் வழிதப்பி, தீர்க்கதரிசனத்தில் மோசம்போய், நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள்.

போஜனபீடங்களெல்லாம் வாந்தியினாலும் அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை.)

மேற்கண்டபடி தவறான வாழ்க்கை வாழ்ந்த இஸ்ரேலர்கள் ஏசாயா போன்ற தீர்க்கதரிசிகள் எச்சரிப்பு கொடுத்தபோது அதை கிண்டலடித்தனர். கடவுள் பால்மறந்த குழந்தைகளிடம் பேசுவார். நாங்கள் எல்லாம் பெரியவர்கள் என்று கூறி குழந்தைகளை போல பேசி தீர்க்கதரிசியை கிண்டலடித்தனர்

(ஏசாயா28:,10

அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? பால்மறந்தவர்களுக்கும், முலை மறக்கப்பண்ணப்பட்டவர்களுக்குமே.

கற்பனையின்மேல் கற்பனையும் கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம் என்கிறார்கள்.)

அப்போது தான் கடவுள் ஏசாயா மூலம் சொல்லுகிறார். இனி உங்களிடத்தில் பரியாச உதடுகளாலும் அந்நிய பாஷையாலும் பேசுவார். இதுவரை உங்களுக்கு புரியும் பாஷையில் ஆறுதல் அளிக்கும் வார்த்தைகளை பேசியும் கேட்கமாட்டோம் (விசுவாசியாததால்) என்றதால் இனி உங்களுக்கு புரியாத மொழியில் பேசுவார் என்று கூறி எந்த வார்த்தைகளை குழந்தைகளை போல கூறி தீர்க்கதரிசியை கிண்டலடித்தார்களோ அதே வார்த்தைகளை கூறி கடவுள் இஸ்ரவேலர்களை கிண்டலடித்தார்

(ஏசாயா 28:11-13

பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார்.

இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதல்; இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள்.

ஆதலால் அவர்கள் போய், பின்னிட்டு விழுந்து, நொறுங்கும்படிக்கும், சிக்குண்டு பிடிபடும்படிக்கும், கர்த்தருடைய வார்த்தை அவர்களுக்குக் கற்பனையின்மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக இருக்கும்.)

அதாவது புரியும் மொழியில் பேசியும் விசுவாசியாத இஸ்ரவேலருக்கு அடையாளமாக அந்நியபாஷை கொடுக்கப்பட்டது.

இது அசீரியர்கள் இஸ்ரவேலர்களை அடிமைபடுத்திய போது நிறைவேறியது. அசீரியர்கள் இஸ்ரவேலருக்கு அந்நிய மொழியான அசீரிய மொழியில் பரியாசம் செய்து பேசினார்கள்.

தேவனை விசுவாசியாத யூதர்கள் வாழ்விலும் பாபிலோனிய படையெடுப்பில் இது நிறைவேறியது

இந்த வசனத்தை மேற்கோள் காட்டி தான் பவுல் சொல்கிறார் அந்நியபாஷை அவிசுவாசிகளுக்கு அடையாளம் என்று.

அதாவது தேவனை விசுவாசியாத இஸ்ரவேலருக்கு அசீரிய மொழியாகிய அந்நியபாஷை அடையாளமாக இருந்தது போல இயேசுவை விசுவாசியாத யூதர்களுக்கு ஆதி சபையில் ஆவியானவரின் வரத்தால் பேசப்பட்ட அந்நிய மொழிகள் (கிரேக்கம், அரபி, பம்பிலியா போன்ற மொழிகள்) அடையாளமாக இருந்தது.


Share