இரட்சிப்பு இழக்க முடியுமா? முடியாதா?
இரட்சிப்பு இழக்க முடியுமா? முடியாதா?
இந்த கேள்விக்கு விடை அறிய இரட்சிப்பு என்றால் என்ன என்றறிதல் அவசியம்.
இரட்சிப்பு என்பது ஒரு பொருளல்ல ஒரு தேவ செயல். காப்பாற்றபடுதல் அல்லது விடுவிக்கப்படல் ஆகும்.
கிறிஸ்து எதிலிருந்து காப்பாற்றுகாறார் அல்லது விடுவிக்கிறார்?
பாவத்தின் தண்டனையிலிருந்து, பாவத்திலிருந்து, பாவ இடத்திலிருந்து
எப்போது விடுவிக்கிறார் அல்லது காப்பாற்றுகிறார் எனில் இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும் போது காப்பாற்றி விட்டார் (past tence)
தீத்து 3:5
நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்மமுழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.(Past tence)
1 தீமோத்தேயு 1:15-16
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்.
அப்படியிருந்தும், நித்திய ஜீவனை அடையும்படி இனிமேல் இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்குத் திருஷ்டாந்தம் உண்டாகும்பொருட்டுப் பிரதான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம்பெற்றேன்.(past tence)
மேற்கூறியதில் பாவத்துக்கான தண்டனை அகற்றப்பட்டது. பாவத்திலிருந்து நாளுக்கு நாள் பரிசுத்தமாகுதல் எனும் செயல் வழி விடுதலையடைகிறோம். பாவம் சூழ்ந்துள்ள இடமே இல்லாத இடத்துக்கு இனி சேர போகிறோம்.
இதிலுள்ள நிகழ்கால எதிர்கால செயல்கள் கூட ஏற்கனவே 100% உறுதிபடுத்தப்பட்டதால் இரட்சிக்கபட்டோம் என இறந்த காலத்தில் சொல்கிறோம். ஆகவே தான் இரட்சிப்பு- மீட்பு குறித்து சில இடங்களில் நிகழ்கால எதிர்கால செயலாகவும் சொல்லப்பட்டிருக்கும்.
சரி ஒரு மனிதன் எப்படி இரட்சிக்கப்படுகிறான்?
தான் ஒரு பாவி என்று உணர்ந்து, பாவத்திலிருந்து விடுதலை பெற விரும்பம் இருந்து ஆனால் மனித மாம்சம் அந்த பாவத்துக்கு அடிமைப்பட்டு உள்ளதால் விரும்பினாலும் அதை நிறைவேற்ற முடியாது என்ற உண்மையை உணர்ந்து, இந்த பாவத்துக்கான தண்டனையை பெற்றுக்கொண்ட இயேசுவால் மட்டுமே விடுதலை தர முடியும் என்பதை உணர்ந்து என் பாவ விடுதலைக்காக இயேசு பலியாகி மரித்து, என்னை தேவனுக்கு ஏற்புடையவனாக்க உயிரோடு எழும்பினார் என்று மனப்பூர்வமாக (theoritical knowledge ஆக மாத்திரமல்ல) விசுவாசித்து ஏற்றுக்கொண்டால் அப்போது அவன் காப்பாற்றப்பட்டு விட்டான். மேலுள்ள உண்மையை விசுவாசிக்கும் போது கூடவே இயேசுவின் பலி மரணத்தின் போது எனக்கு என்ன நடந்தது என்பதையும் எண்ண வேண்டும்
(ரோமர் 6:6-8,10-11
நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம். மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனே கூடப்பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம். அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார். அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.)
இந்த அடிப்படையில் விசுவாசிப்பவன் தன் நிலை உணர்ந்தும் தேவனின் அன்பை புரிந்தும் பரிசுத்த ஆவியின் செயல் மூலமும் விசுவாசிப்பதால் அவன் தேவனால் பிறந்தவன் அல்லது மறுபடி பிறந்தவன் அல்லது காப்பாற்றப் பட்டவன் அல்லது விடுதலை பெற்றவன் எனும் நிலையை அடைகிறான். (Past tence)
இப்படி காப்பாற்றப்பட்டவன் காப்பாற்றபட்டதை இழப்பானா? கேள்வியே அர்த்தமற்றது தானே?
இப்படி காப்பாற்றப்பட்டவன் தன்னை யார் காப்பற்றியது என்பதையும் ஏன் காப்பாற்றப்பட்டேன் என்பதையும் அறிவான், மேலும் தான் காப்பாற்றப்பட்டதில் தன் கிரியை எதுவுமில்லை என்பதையும் முழுக்க முழுக்க கடவுளின் இரக்கம்- அருள் என்பதையும் அறிவான். இப்படியிருக்க இவன் எப்படி விரும்பி போய் பாவம் செய்ய முடியும்? இரட்சிப்பை இழக்க முடியும்?
ஒருவேளை பாவத்தில் விழ நேரிட்டாலும் பரிசுத்த ஆவியானவர் பரிசுத்த பாதையில் நடத்துகிறார். கிருபையினால் நாம் காப்பாற்றப்பட்டோம் என்பது உண்மையானால் கிருபை நம்மை போதித்து நடத்துகிறதும் உண்மை
தீத்து 2:11-13
ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க *தேவகிருபையானது* பிரசன்னமாகி, நாம் அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி, நாம் நம்பியிருக்கிற ஆனந்தபாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் *போதிக்கிறது.*
மேலும் தேவனால் தான் இரட்சிக்கப்பட்டேன் என்பவன் எப்படி அவரை துக்கப்படுத்த துணிவான். தேவனின் அன்பை புரிந்து கொண்டவனால் நான் பாவஞ்செய்து ஆவியானவர் துக்கப்படுத்தி விட கூடாது எனும் உணர்வுள்ளவனாகவே இருப்பான்.
ஆகையால் தான் காப்பாற்றப்பட்டவன் எக்காரணம் கொண்டும் மறுபடி கெட்டு போவதில்லை என்கிறார் இயேசு
யோவான் 10:27-29
என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் *ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை*, ஒருவனும் அவைகளை என் *கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதுமில்லை.*
அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் *பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.*)
இங்கே இரட்சிக்கப்பட்டவனை யாராலும் தேவனிடமிருந்து பறிக்க முடியாதென்று பார்க்கிறோம்.
அதே போல எந்த செயலாலும் தேவனின் அன்பை விட்டு பிரிக்க முடியாதென்று பவுல் சொல்கிறார்
(ரோமர் 8:36-39
கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ, இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு *நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்*)
இங்கே எந்த செயலாலும் இரட்சிப்பு இழக்க முடியாது என்பதை நிச்சயம் என்ற வார்த்தையை பயன்படுத்தி உறுதிபடுத்துகிறார்.
ஆகையால் இரட்சிக்கப்பட்டவர்கள் அதை இழக்க முடியுமா எனும் கேள்வி அர்த்தமற்றது. இரட்சிக்கப்பட்டிருக்கிறாயா எனும் கேள்வியே சரியானது.
அப்படியானால் ஒரு முறை இரட்சிக்கப்பட்டவர்கள் என்னதான் பாவம் செய்தாலும் அதை இழக்க முடியாதா என்ற கேள்வி சிலருக்கு வரும்.
இந்த கேள்வி ஒரு அர்த்தமற்ற கேள்வி. முதலில் இரட்சிக்கப்பட்டவர்கள் யார்? எப்படிப்பட்ட மாற்றத்தினூடாக இரட்சிக்கப்பட்டார்கள் என மேலே சொன்ன சத்தியத்தை உணர்ந்தால் இந்த கேள்வியே வராது.
இரட்சிக்கப்பட்டவன் தன்னை பாவத்துக்கு மரித்தவனாக எண்ணிக்கொண்டு வாழ்பவன்.
ஆகையால்
ரோமர் 6:2
பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்?
அதையும் மீறி சிலரை உதாரணம் காட்டி இவன் இரட்சிக்கப்பட்டவன் ஆனால் இப்போது எந்த உணர்வும் இன்றி பாவத்தில் தான் வாழ்கிறான். அப்படியாயின் அவன் இரட்சிப்பை இழக்க முடியாதா? என கேட்டால்
பாவத்தில் வாழ்பவன் இரட்சிப்பை இழக்க முடியும் என்ற முடிவுக்கல்ல அவன் இரட்சிப்பை பெறவே இல்லை என்ற முடிவுக்கு தான் வரணும். அதை தான் யோவான் சொல்கிறார்
(1 யோவான் 3:8-10
பாவஞ்செய்கிறவன்*(பாவத்தில் நிலைத்திருப்பவன்)* பிசாசினாலுண்டாயிருக்கிறான்;*(தேவனால் இரட்சிக்கப்படவில்லை)* ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். தேவனால் பிறந்த எவனும்*(இரட்சிக்கப்பட்ட எவனும்)* பாவஞ்செய்யான் *(பாவத்தில் நிலைத்திரான்)*, ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான் *(பாவத்தில் நிலைத்திருக்கமாட்டான்)*.
இதினாலே தேவனுடைய பிள்ளைகள் *(இரட்சிக்கப்பட்டவன்)* இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் *(இரட்சிக்கப்படாதவன்)* இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல *(இரட்சிக்கப்பட்டவனல்ல)*
:-குறிப்பு மேலே சில வார்த்தைகளை புரிதலுக்காக இணைத்துள்ளேன். இந்த இடத்தில் பாவஞ்செய்தல் என்ற வார்த்தைக்கு யோவான் மூல மொழியில் *பாவத்தில் நிலைத்திருத்தல்* அல்லது *தொடர்ந்து பாவஞ்செய்தல்* எனும் வார்த்தையை தான் பயன்படுத்தியுள்ளார்
இங்கே இரட்சிக்கப்பட்டவர்கள் பாவஞ்செய்யமாட்டான் (பாவத்தில் நிலைத்திரான்) என எழுதிய அதே யோவான் இரட்சிக்கப்பட்டவர்கள் பாவம் செய்வார்கள் எனவும் எழுதியுள்ளார். அப்படி பாவம் செய்யும் போது என்ன நடக்கும் என்பதையும் எழுதியுள்ளார்
(1 யோவான் 2:1
என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் *பாவஞ்செய்வானானால்* நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.)
:- இங்கே பாவஞ்செய்தல் என்பதற்கு பாவத்தில் நிலைத்திருந்தல் என்ற வார்த்தை அல்ல
இரட்சிக்கப்பட்டவன் பாவஞ்செய்தால் இயேசு பிதாவிடம் பரிந்து பேசுகிறார். இதை இரட்சிக்கப்பட்டவன் தான் பாவம் செய்வதற்கு சாதகமாக எடுத்துக்கொள்ளமாட்டான். காரணம் இதை பாவம் செய்யாதபடிக்கு தான் யோவான் எழுதுகிறார். அதாவது நான் பாவம் செய்வதால் இயேசுவை எனக்காக பிதாவிடம் பரிந்து பேசும் இக்கட்டான நிலைக்கு தள்ளுகிறேனே. அவரை துக்கப்படுத்துகிறேனே என்றெண்ணுவான்.
யாராகிலும் ஒருவர் நான் பாவம் செய்தால் இயேசு எனக்காக பிதாவிடம் பரிந்து பேசுவார் எனக்கு பிரச்சனை இல்லை ஆகையால் எவ்வளவு வேண்டுமானாலும் பாவம் செய்யலாம் என நினைத்தால் அவன் இரட்சிக்கபடவில்லை என்றுதான் அர்த்தமே தவிர மக்கள் இப்படி நினைப்பார்கள் என்பதற்காக சத்தியத்தை மாற்றி பேச முடியாதே
இரட்சிப்பை இழக்க முடியும் என போதிப்போரின் பயம் மேற்கூறியது போன்றதே. என்ன ஆனாலும் இரட்சிப்பு இழக்க முடியாது என போதித்தால் இரட்சிக்கப்பட்டவர்கள் துணிந்து பாவம் செய்து விடுவார்களே என்ற பயம். இது தேவையற்ற பயம். காரணம் இரட்சிப்பை இழந்து விடுவோமோ நரகம் போய் விடுவோமோ என்ற பயத்தினால் பாவம் செய்வதை தவிர்ப்பவனின் உள்ளுக்குள் பாவம் செய்யும் ஆசை உள்ளது. இரட்சிப்பை இழக்க முடியாது எனும் சத்தியம் கேட்டும் ஒருவன் பாவம் செய்யாமல் வாழ்வது தான் உண்மையான இரட்சிப்பு. இந்த சத்தியம் கேட்டு ஒருவன் பாவம் செய்கிறான் எனில் அவன் உண்மையில் இரட்சிக்கப்படவில்லை. இவ்வளவு நாட்கள் ஏதோ பயத்தின் காரணமாக பாவம் செய்யாமல் வாழ்ந்திருக்கிறார் என்பதே உண்மை
இங்கே எவ்வளவு பாவம் செய்தாலும் இரட்சிப்பை இழக்க முடியாதா எனும் கேள்விக்கு பதில் சொல்லும் சிலர் செய்யும் தவறு என்னவென்றால்
இந்த கேள்வியே தவறு இரட்சிக்கப்பட்டவனால் பாவத்தில் நிலைத்திருக்க முடியாது. பாவத்தில் விழ நேரிட்டாலும் தேவ உதவியோடே உடனே எழும்புவான், என்று சொல்வதை விட்டுவிட்டு எவ்வளவுதான் பாவஞ்செய்தாலும் இரட்சிப்பை இழக்க முடியாது என்று வாதத்தில் வெற்றிபெற பேச நினைப்பது தவறு. பாவத்தில் நிலைத்திருக்க முடியாது என வேதம் கூறினால் அதோடு நிறுத்த வேண்டும். மறுபடியும் ஒருவேளை தொடர்ந்து பாவஞ்செய்தால் என தொடர கூடாது.
*இரட்சிப்பை இழக்க முடியாது எனும் உபதேசம் பாவம் செய்ய தூண்டுகிற உபதேசமா?*
யூதாஸ் என்ற மனிதனை நம் முன் நிறுத்தினால் சிலர் சொல்வார்கள் யூதாஸ் இரட்சிப்பை இழந்தான் என்று. சிலர் சொல்வார்கள் யூதாஸ் இரட்சிக்கப்படவேயில்லை என்று.
இதில் ஏதோ ஒன்று தான் நிஜம். இதில் இரட்சிப்பை இழக்க முடியும் என்றவர்களின் குற்றச்சாட்டு அர்த்தமற்றதாக உள்ளது.
காரணம் யூதாஸ் இரட்சிக்கப்பட்டு அதன்பின் பெரும் பாவம் செய்தும் இரட்சிப்பை இழக்கவில்லை என்று போதித்திருந்தால் அதை குற்றச்சாட்டாக எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் எல்லாரையும் பாவம் செய்ய தூண்டுகிறீர்கள் என சொல்லலாம். ஆனால் பாவம் செய்து மாண்டு போன யூதாஸை இரட்சிக்கப்படவே இல்லை என்று சொல்லும் போது அது எப்படி பாவம் செய்ய தூண்டும் உபதேசம் ஆகும்.
இரட்சிப்பை இழக்க முடியும் எனும் உபதேசம் யூதாசை பார்த்து யூதாசே ஒழுங்கா இரு இல்லையென்றால் இரட்சிப்பை இழந்து விடுவாய் என கூறும் உபதேசம்.
இரட்சிப்பை இழக்க முடியாது எனும் உபதேசம் யூதாசை பார்த்து யூதாசே உன் செயல்களை பார்த்தால் இரட்சிக்கப்பட்டதாக தோன்றவில்லை. ஆகவே நீங்கள் விசுவாசமுள்ளவர்களோ அல்லவோ என்று சோதித்து பாருங்கள் என சொல்லும் உபதேசம்.
ஆகவே தான் பவுல் கொரிந்து சபை மக்களை பொதுவாக பரிசுத்தவான்களே என அழைத்தாலும் அதன்பின் சிலரது நடக்கையை பார்த்து நீங்கள் ஆவிக்குரியவர்கள் (இரட்சிக்கப்பட்டவர்கள்) என்று அல்ல மாம்சத்துக்குரியவர்கள் (இரட்சிக்கப்படாதவர்கள்) என்று அல்லது இப்போது தான் இரட்சிக்கப்பட்ட வளராத குழந்தைகள் என்று கருதி பேசுகிறேன் என்கிறார்.
சபைக்குள் இருக்கிற எல்லாரையும் இரட்சிக்கப்பட்டதாக நாம் நினைத்தாலும் எல்லாரும் இரட்சிக்கப்பட்டிருக்க அவசியமில்லை. அப்போஸ்தலர்களுக்கே சபையில் இருக்கிறதில் யார் இரட்சிக்கப்பட்டது அல்லது இரட்சிக்கப்படாதது என்று தெரியவில்லை. எப்போது தெரிந்தது என்றால் கிறிஸ்துவை விட்டு பின்வாங்கி தவறான உபதேசத்தை பற்றி சென்றபோது தான் தெரிந்தது ஓ இவர்கள் இரட்சிக்கப்படவே இல்லை என்று. இப்படிப்பட்டவர்களை இரட்சிப்பை இழந்தனர் என இரட்சிப்பை இழக்க முடியும் என சொல்பவர்கள் நம்புவார்கள். ஆனால் அப்போஸ்தலர்கள் அவர்களை இரட்சிப்பை இழந்ததாக நம்பவில்லை. ஆதிமுதலே இரட்சிப்பை பெறவேயில்லை என கூறினார்கள்.
அப்போஸ்தலன் யோவன் சொல்கிறது பாருங்கள்.
1 யோவான் 2:19
அவர்கள் *(அந்தி கிறிஸ்துக்கள்)* நம்மைவிட்டுப் பிரிந்துபோனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை *(நம்மை போல இரட்சிக்கப்பட்டிருக்கவில்லை)*; நம்முடையவர்களாயிருந்தார்களானால் *(இரட்சிக்கப்பட்டிருந்தால்) நம்முடனே *நிலைத்திருப்பார்களே*; எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று *(நம்மை போல இரட்சிக்கப்பட்டவர்கள் அல்லவென்று)* வெளியாகும்படிக்கே பிரிந்து போனார்கள்.
இங்கே யோவானுக்கே அவர்கள் பிரிந்து போய் அந்தி கிறிஸ்துக்களாய் மாறின பின் தான் தெரிந்தது அவர்கள் இரட்சிக்கப்படவேல்லை என்று. ஆனால் இரட்சிப்பை இழக்க முடியும் என்பவர்கள் என்ன சொல்வார்கள் அவர்கள் இரட்சிக்கப்பட்டிருந்தார்கள் அதன் பின் அந்தி கிறிஸ்துக்களாய் மாறினதால் இழந்தார்கள் என்று.
இதே போல தான் யூதாஸ் இயேசுவை காட்டிகொடுத்ததால் இரட்சிப்பை இழந்தான் என்பார்கள். ஆனால் இயேசு அதற்கு முன்பே அவன் இரட்சிக்கபடவேயில்லை என்பதை அறிந்திருந்தார்.
(யோவான் 6:64-65
ஆகிலும் உங்களில் *விசுவாசியாதவர்கள் சிலர் உண்டு* என்றார்; விசுவாசியாதவர்கள் இன்னாரென்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இன்னானென்றும் ஆதிமுதலாக இயேசு அறிந்திருந்தபடியால், அவர் பின்னும்: ஒருவன் என் பிதாவின் *அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான்* என்று இதினிமித்தமே உங்களுக்குச் சொன்னேன் என்றார்.)
இங்கே இயேசு யூதாசை குறித்து அவரை விசுவாசியாதவன் என்றும் பிதாவின் அருள்(கிருபை) பெறாதவன் என்றும் கூறுவதன் மூலம் இரட்சிக்கப்படாதவன் என சுட்டிக்காட்டுகிறார்.
மேலும்
யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான் எனும் வசனம் எழுதப்படும் பல காலத்துக்கு முன்னே யூதாஸு பிசாசாயிருப்பான் என கூறாமால் ஏற்கனவே பிசாசாயிருக்கிறான் என்றே கூறுகிறார்.
யோவான் 6:70-71
இயேசு அவர்களை நோக்கி: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா உங்களுக்குள்ளும் ஒருவன் *பிசாசாயிருக்கிறான்* என்றார்.
சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து பன்னிருவரிலொருவனாயிருந்தும், தம்மைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனாயிருந்தபடியினால் அவனைக் குறித்து இப்படிச் சொன்னார்.)
மேலும் இரட்சிக்கப்பட்டவன் கெட்டு போனான் என கூறாமல் கேட்டின் மகன் (இரட்சிக்கப்படாதவன்) கெட்டு போனான் என்றே கூறுகிறார். மேலும் பிதா இயேசுவுக்கு கொடுத்த ஒருவரும் (இரட்சிக்கப்பட்ட ஒருவரும்) கெட்டு போகவுமில்லை என்கிறார்
(யோவான் 17:12
நான் அவர்களுடனேகூட உலகத்திலிருக்கையில் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக்கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, *கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை.*)
இன்றைய உதாரணங்கள்படி
மோகன் சி போன்றோரை இரட்சிக்கப்பட்டு அதன்பின் இழந்துள்ளார் என நம்புகிறது ஒரு குழு
மோகன் சி இரட்சிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என நம்புகிறது இன்னொரு குழு.
அதாவது இரட்சிப்புக்கேற்ற கனிகள் வெளிப்படாமல் மாம்ச கிரியைகளை வெளிப்படுத்துவோரை இரட்சிப்பை இழந்து விடுவாய் என்கிறது ஒரு குழு – இரட்சிப்பை இழக்க முடியும் எனும் குழு
இரட்சிப்புக்கேற்ற கனிகள் வெளிப்படாமல் மாம்ச கிரியைகளை வெளிப்படுத்துவோரை இரட்சிக்கப்பட்டாயா என சந்தேகத்தை எழுப்பி சோதித்து பார் என்கிறது இன்னொரு குழு. -இரட்சிப்பை இழக்க முடியாது எனும் குழு
இப்படி இருக்க இரட்சிப்பை இழக்க முடியாது எனும் உபதேசம் பாவம் செய்ய தூண்டும் உபதேசம் என்பது எவ்வளவு அபத்தம்.
பொதுவான சபையில் பேசும் போது எல்லாரையும் இரட்சிக்கப்பட்டவர்களாக நாம் கருதினாலும், உண்மையில் இரட்சிக்கப்படாமல் இரட்சிக்கப்பட்டதாக நினைத்து கொண்டிருப்போரும் இருக்க கூடும் என்பதை மனதில் வைத்தே பேச வேண்டும்.
கர்த்தரை தேடுபவர்களுக்கு ஒரு நன்மையும் குறைவுபடாதா?
கிறிஸ்தவர்களுக்கு ஒரு நன்மையும் குறைவு படாதா??
சங்கீதம் 34:10
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங்குறைவுபடாது.
ஒரு பிரசங்கியாரின் ஒரு பிரசங்கத்தை கேட்க நேர்ந்தது. அதில் கர்த்தரை தேடுபவர்களுக்கு வரும் ஆசீர்வாதங்கள் என்னென்ன என பேசியவர் தன் முதல் குறிப்பாக மேலுள்ள வசனபகுதியை காண்பித்து கர்த்தரை தேடினால் உலகம் முழுவதும் பஞ்சம் வந்தாலும் உங்கள் வீட்டில் சாப்பாடு இருக்கும், உலகம் முழுதும் பெட்ரோல் தீர்ந்து போனாலும் உங்கள் வண்டி ஓடும் என அளந்து விட்டார். இது சரியா?
இது சரியென்றால் முதல் நூற்றாண்டில் கர்த்தரை தேடிய கிறிஸ்தவர்களுக்கு எந்த பிரச்சனையும் வந்திருக்காதுதானே.
அன்று எருசலேமில் பஞ்சம் வந்தபோது அங்கே இருந்த கிறிஸ்தவர்களும் பாதிக்கப்பட்டார்கள். ஆகவே தான் பவுல் தர்மசகாயம் அனுப்பும்படி தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
(1 கொரிந்தியர் 16:1
பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக்குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்குப்பண்ணின திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள்.)
பவுல் கர்த்தரை தேடினவன்தானே பின் பவுல் ஏன் பட்டினியாயிருந்தார்? குறைச்சலில் இருந்தார்? அப்போ அன்றைக்கு பட்டினியாக இல்லாதவர்கள் கர்த்தரை தேடினவர்களாகவும் பட்டினியாக இருந்த பவுல் கர்த்தரை தேடாதவராகவும் காணப்பட்டாரா?
பவுல் திருப்தியாக இருக்க மட்டுமல்ல பட்டினியாக இருக்கவும், நிறைவாயிருக்க மட்டுமல்ல குறைவாயிருக்கவும் போதிக்கப்பட்டார். அப்படியானால் சங்34:10 ன் படி உலகமெல்லாம் பஞ்சம் வந்தாலும் பவுலுக்கு பட்டினி வராது சாப்பாடு இருக்கும் என்ற வெளிப்பாடு கிடைக்கவில்லையா என்ன?
(பிலிப்பியர் 4:12
தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்.)
பவுல் போதிக்கப்பட்டதற்கும் இன்றைய கிறிஸ்தவர்கள் போதிக்கப்படுவதற்கும் எவ்வளவு வித்தியாசம்
மேலும் எபிரேய ஆசிரியர் கர்த்தரை தேடிய பலர் குறைவை அனுபவித்தார்கள் என்கிறாரே. குறைவை மட்டுமல்ல அதை விட தீவிரமான துன்பங்களை அனுபவித்தார்கள்
(எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:36-38
வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்;
கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்; உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை; அவர்கள் வனாந்தரங்களிலேயும் மலைகளிலேயும் குகைகளிலேயும் பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள்.)
மேலும் பல மிஷ்னரிமார் வாழ்க்கையை பார்த்தால் இன்று பிரசங்கித்த பிரசங்கியாரின் கூற்றுப்படி பல மிஷ்னரிமார்கள் கர்த்தரை தேடாதவர்கள் என்ற முடிவுக்கு வரலாமா?
வெறும் இன்றைய காலத்தில் நான் வாழும் வாழ்க்கையை வைத்து எனக்கு எந்த குறைச்சலும் இல்லை ஆகையால் கர்த்தரை தேடுகிற யாருக்கும் எந்த குறைச்சலும் வராது என நினைத்து பழைய ஏற்பாட்டு வசனங்களை வைத்து மக்களிடம் பொய் கூற கூடாது.
இந்தியா முழுவதும் மோடியின் பணமதிப்பிழப்பால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட போது கிறிஸ்தவர்களுக்கு (கர்த்தரை தேடுகிறவர்களுக்கு) மட்டும் எந்த பாதிப்பும் வரவில்லையா? சோமாலியா போன்ற நாடுகளில் கர்த்தரை தேடாதவர்களுக்கு மட்டும் தான் பஞ்சம் உள்ளதா?
கர்த்தரை தேடினால் என்ன நன்மை கிடைக்கும் என சொல்லி அதனால் தேடுங்கள் என்பது கிறிஸ்தவ உபதேசமே ஆகாது.
நாம் ஏன் கர்தரை தேட வேண்டும்?
அவர் முதலில் என்னை தேடி வந்து தன் அன்பை விளங்கப்பண்ணினதால்.
கர்த்தரை தேடினால் என்ன கிடைக்கும்?
கர்த்தரே கிடைப்பார் அதை விட வேறென்ன வேண்டும்.
கர்த்தரை தேடினால் நன்மை குறைவுபடாதா? ஆம். என்ன நன்மை?
மத்தேயு 7:11.. பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?
லூக்கா 11:13
, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.
கர்த்தரை தேடுகிறவர்களுக்கு அவர் பரிசுத்த ஆவியானவரையே கொடுத்து விட்டார். இதை விட பெரியதா உலக காரியங்கள்?
ஆம் நாம் நமக்கு தேவை என்று நினைத்து பல காரியங்களை தேவனிடம் கேட்கலாம். ஆனால் நமக்கு எது தேவையோ (பிதாவின் சித்தப்படி) அதற்கேற்றபடி நம்மை நடத்தவும் நமக்காக சரியாக வேண்டவும் செய்கிறார் பரிசுத்த ஆவியானவர். அந்தபடி குறைச்சல் கூட நன்மையாக இருக்க வாய்ப்பு உண்டு. உலகமே செழிப்பில் இருந்தாலும் கர்த்தரை தேடுகிற ஒருவனுக்கு மட்டும் ஏற்படும் பட்டினி கூட அவனது நன்மையாக இருக்க வாய்ப்பு உண்டு. பவுலுக்கு மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டது. அது நீங்க வேண்டும் என்பது பவுலின் விருப்பம். ஆனால் தேவன் அதை செய்யவில்லை. இங்கே பவுலது இந்த முள் அல்லது பலவீனம் அவனுக்கு நன்மைதான்.
என்ன நன்மை? அதிக வெளிப்பாடு பெற்றதன் நிமித்தம் தன்னை பெருமைபடுத்தி விட கூடாது என்ற நன்மை
இந்த பலவீனத்தையும் தாங்கும்படியாக தேவ வல்லமை பவுலின் மேல் தங்கத்தக்கதான தேவ கிருபை கிடைத்தது நன்மை
(2 கொரிந்தியர் 12:7
அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது.
2 கொரிந்தியர் 12:9
அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.)
கர்த்தரை தேடுகிறவர்கள் வாழ்வில் நடக்கும் அனைத்தும் நன்மைக்கேதுவானவைகள். அது பட்டினியாகவே இருந்தாலும். கர்த்தரை தேடுகிறவர்களுக்கு இந்த நன்மைதான் ஒருபோதும் குறைவுபடாது.
(ரோமர் 8:28
அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.)
விட்டுகொடுத்தால் கெட்டுபோவதில்லை
ஆபிரமும் ஆபிராமின் சகோதரனுடைய மகனாகிய லோத்தும் கானானுக்கு வரும்போது ஒன்றாக வந்தார்கள். ஒன்றாக சம்பாதித்தார்கள். தற்போது இருவரும் ஒன்றாக குடியிருப்பதால் இருவரது வேலைக்காரர்களுக்குள்ளும் வாக்குவாதம் நடப்பதை கண்ட ஆபிராம், இப்படியே போனால் நாளை லோத்துவுக்கும் எனக்கும் கூட வாக்குவாதம் நேர வாய்ப்பு உண்டு, அப்படி சொந்த குடும்பத்துக்குள்ளேயே வாக்குவாதம் நடந்தால் சுற்றியிருக்கும் கானானியருக்கும் பெரிசியருக்கும் முன்பாக அது சாட்சி கேடாகும் என கருதி, லோத்துவை அழைத்து பிரிந்து செல்ல சொல்லி லோத்துவுக்கு விருப்பமான இடத்தை தேர்ந்தெடுக்கவும் சொல்கிறார்.
(ஆதியாகமம் 13:7-9
ஆபிராமுடைய மந்தைமேய்ப்பருக்கும் லோத்துடைய மந்தைமேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. அக்காலத்திலே கானானியரும் பெரிசியரும் அத்தேசத்தில் குடியிருந்தார்கள். ஆபிராம் லோத்தை நோக்கி: எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர். இந்தத் தேசமெல்லாம் உனக்குமுன் இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்றான்.)
லோத்து மிக செழிப்பான பகுதியை தேர்ந்தெடுத்தார். தன் சித்தப்பா செழிப்பான இடத்துக்கு செல்லட்டும் என லோத்து நினைக்கவில்லை. மாறாக தனக்கே செழிப்பான இடம் கிடைக்க வேண்டும் என எண்ணினார்.
ஆனால் ஆபிராம் அப்படியல்ல, தனக்கு கிடைப்பது செழிப்பான இடமோ செழிப்பில்லா இடமோ, அது முக்கியமல்ல, குடும்பத்தில் சண்டை சச்சரவு இல்லாமல் வாழ்வது போதும் என நினைத்தார்.
ஆபிராம் அன்று லோத்து கேட்டதை விட்டுக்கொடுத்ததால் அவனது உறவு கெட்டுபோகவில்லை. ஒருவேளை ஆபிராம் விட்டுக்கொடுக்காமல் இருந்திருந்தால் ஆபிராமுக்கு செழிப்பான இடம் கிடைத்து இருக்கலாம். ஆனால் லோத்துவுக்கு அதனால் மனக்கசப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு.
இயேசு கிறிஸ்து பூமியில் மனிதனாய் வாழ்ந்தபோது ஒருவன் வந்து தன் சகோதரனுடன் பஞ்சாயத்து பண்ணி தன் சொத்தை பெற்றுத்தர சொன்ன போது, இயேசு அதற்கு உடன்படவில்லை. மாறாக அந்நேரத்தில் தானே பொருளாசைக்கு எதிராக பாடம் எடுத்தார்.
(லூக்கா 12:13-15
அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஆஸ்தியைப் பாகம்பிரித்து என் வீதத்தை எனக்குத்தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். அதற்கு அவர்: மனுஷனே, என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார் என்றார். பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.)
இங்கே இயேசு கிறிஸ்துவிடம் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மாறாக ஆஸ்தியை பங்கிடுகிறவனாக என்னை உங்களுக்கு வைத்தது யார் என்ற கேள்வியை முன்வைத்தார்.
ஆனால் இன்று அநேக கிறிஸ்தவர்கள் இதுபோன்ற விஷயங்களை தான் தேவனிடம் ஜெபம் என்ற பெயரில் கோரிக்கையாக வைக்கின்றனர். அன்றைக்கு இயேசு கூறிய பதிலிலிருந்து மாற்றம் இருக்கும் என்று நினைக்கிறார்களோ என்னவோ.
அன்புக்குரியவர்களே உங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய விஷயமேயானாலும் வேறொருவரோடு சண்டையிட்டு பெற்றுக்கொள்ள வேண்டாம். சண்டை மூலம் பெற்றால் உறவை இழப்பீர்கள். ஆனால் விட்டுக் கொடுப்பதன் மூலம் நஷ்டமடைந்தாலும் உறவை இழக்காமல் சம்பாதிப்பீர்கள். உறவா? சொத்தா?
ஆகவே தான் பவுல் கேட்கிறார். நீங்கள் ஏன் நஷ்டத்தை பொறுத்துக்கொள்ள கூடாது என்று.
(1 கொரிந்தியர் 6:7
நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை?)
ஆம் வழக்காடி சண்டை போட்டு சகோதரத்துவத்தை இழப்பதை விட, நஷ்டமே அடைந்தாலும் விட்டுகொடுத்து சகோதரத்துவத்தை பேணுவது உங்கள் சாட்சி வாழ்வுக்கு ஏதுவாகும்.
சொத்து போனாலும் விட்டுக் கொடுத்தால் அன்பு கெட்டுபோவதில்லை.
☝🏿 இதை பின்பற்றுங்கள் அன்பே பிரதானம் எனில்.
சொத்து கிடைத்தாலும் விட்டுக்கொடுக்கா விட்டால் அன்பு கெட்டுபோகும்
☝🏿 இதை பின்பற்றுங்கள் அன்பை விட சொத்தே பிரதானம் எனில்
ஆபிரகாமும் செழிப்பும் -Prosperity Gospel

ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் களுக்கு உண்டு என பவுல் கலாத்தியருக்கு எழுதினது தான் எழுதினார் அதன் பொருளை சரியாக அறியாமல் ஆபிரகாம் சீமானாயிருந்தது தான் ஆசீர்வாதம் என பலர் நினைத்து ஆபிரகாமை போல பணக்காரானக வேண்டும் என விரும்புகின்றனர்.
(ஆதியாகமம் 13:2
ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமானாயிருந்தான்.)
உண்மையில் பவுல் விசுவாசத்தால் நீதிமானாக்கப்படுவதை தான் ஆபிரகாமின் ஆசீர்வாதம் என கூறியிருப்பார்
(கலாத்தியர் 3:8-9,11,14
மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது.
அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.
நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.
ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று.)
சரி ஆபிரகாம் எப்படி சீமானானான் என பார்ப்போமா?
ஆபிராமை தேவன் அழைத்தார். ஆபிராம் தன் 75வது வயதில் அழைப்புக்கு கீழ்படிந்து புறப்பட்டார். எங்கே போகிறோமென்று கிளம்பும் போது ஆபிராமுக்கு தெரியாது. ஆனாலும் தேவனை நம்பி புறப்பட்டார். புறப்படும்போது தான் ஏற்கனவே சம்பாதித்த செல்வங்களையெல்லாம் கொண்டுதான் வருகிறாரேயன்றி வெறுங்கையாய் வரவில்லை. ஏற்கனவே சம்பாதித்த பொருட்கள் ஆபிராம் விக்கிரக வழிபாட்டில் இருக்கும் போது சம்பாதித்தவை. ஆபிரகாமை போல பணக்காரனாக வேண்டும் என்பவர்கள் நன்றாக கவனியுங்கள்
(ஆதியாகமம் 12:5
ஆபிராம் தன் மனைவியாகிய சாராயையும், தன் சகோதரனுடைய குமாரனாகிய லோத்தையும், தாங்கள் சம்பாதித்திருந்த தங்கள் சம்பத்தெல்லாவற்றையும், ஆரானிலே சவதரித்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, அவர்கள் கானான் தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், கானான் தேசத்தில் சேர்ந்தார்கள்.)
ஆபிராம் கானான் நாட்டில் மோரே எனும் பகுதிக்கு வந்து சேர்ந்தான். இதுதான் உன் சந்ததிக்கு நான் கொடுக்கும் தேசம் என்று ஆண்டவர் தரிசனமாகி சொன்னார். உடனே ஆபிராம் அங்கேதானே ஒரு பலிபீடம் கட்டி தேவனை தொழுது கொண்டான்.(ஆதி12:7)
சில நாள் கழித்து ஆபிராமுக்கு ஒரே இடத்தில் தொழுது கொள்வது சலிப்பு ஏற்படுத்தியதோ என்னவோ அங்கிருந்து கிளம்பி இன்னொரு இடத்தில் பலிபீடம் கட்டி தொழ ஆரம்பித்தான். (ஆதி12:8)
மேலும் சில நாள் கழித்து அந்த இடமும் சலிப்பு தட்டியதோ என்னவோ அங்கிருந்தும் கிளம்பி தெற்கு நோக்கி பயணித்து தற்கு நாட்டுக்கே சென்றுவிட்டார். அதாவது ஆண்டவர் காண்பித்த கானான் நாட்டைவிட்டு நெகேவ் எனப்படும் தெற்கு நாட்டுக்கு சென்று விட்டான். கானான் தேசத்துக்குள்ளேயே இடம் விட்டு இடம் மாறும்போது கடவுளை தொழுத ஆபிராமால் நாடு விட்டு நாடு மாறிய போது பலிபீடம் கட்டி தேவனை தொழ முடியவில்லை. (ஆதி 12:9,10)
ஆபிராம் தெற்கு நாட்டில் இருக்கையில் கொடிய பஞ்சம் வந்தது. தற்போது ஆபிராம் விட்டு வந்த கானான் தேசத்துக்கு திரும்பி சென்றிருக்க வேண்டும். ஆனால் ஆபிராம் மறுபடியும் தென் திசையில் பயணித்து எகிப்து நாட்டுக்கு செல்கிறார். காரணம் ஆண்டவர் கொடுத்த கானானை விட ஆபிராமின் பார்வைக்கு எகிப்து தான் செழிப்பாக இருந்தது. (ஆதி12:10)
ஆபிராம் எகிப்துக்கு செல்வதற்குமுன் அவனுக்கு எகிப்து மக்களை பற்றி ‘அங்குள்ளவர்கள் அழகான பெண்ணை கண்டால் அந்த பெண்ணுக்கு திருமணமே ஆகியிருந்தாலும் புருஷனை கொன்றாகிலும் அந்த பெண்ணை அடைவார்கள்’ என்று அறிந்திருந்தான். அங்கே சென்றால் இப்படி ஓரு ஆபத்து இருப்பது தெரிந்தும் ஆபிராம் எகிப்துக்கு செல்ல காரணம் எகிப்தின் செழிப்பு. ஆபிராம் மனைவி சாராயிடத்தில் தன்னை புருஷன் என சொல்லாதே சகோதரன் என சொல் என சொல்லியிருந்தான். தற்போது சாராயின் அழகில் மயங்கும் யாராகிலும் சாராயை மட்டும் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் ஆபிராமை அவள் புருஷன் என அறியாததால் சகோதரன் தானே என எண்ணி கொல்லமாட்டார்கள். என்ன ஒரு ராஜதந்திரம். (ஆதி12:11-13)
இங்கேயும் குறிப்பிட வேண்டிய காரியம், கானான் தேசத்தில் இருந்தது போல கடவுளை தொழுது கொள்ளும் வழக்கத்தை ஆபிராம் அடியோடு மறந்திருந்தான்.
ஆபிராம் நினைத்தபடி எகிப்து ஆண்கள் சாராயின் அழகில் மயங்கினர். அவளது அழகை குறித்த புகழ்ச்சி எகிப்தின் பார்வோன் வரை சென்றது. பார்வோனும் சாராயை அடைய நினைத்து அரண்மனைக்கு கொண்டு வந்தான். சாராய்க்கு பதிலாக ஆபிராமுக்கு ஏராளமான செல்வங்கள் கிடைக்கிறது. இப்பொழுதாகிலும் ஆபிராம் உண்மையை சொல்லி மனைவியை காப்பாற்ற எண்ணியிருக்க வேண்டும். மாறாக மனைவியை பார்வோனோடு அனுப்பி வைத்து விட்டு பதிலுக்கு பார்வோன் கொடுத்த செல்வ செழிப்பை பெற்றுக்கொண்டான் ஆபிராம். (ஆதி12:16)
2013 ம் ஆண்டு வந்த ஒரு செய்தி ஞாபகத்துக்கு வந்தது. பதவி உயர்வுக்காக மனைவியை உயர் அதிகாரிகளுக்கு விருந்தாக்கிய கணவன். <-click for that news
ஆபிரகாமை போல பணக்காரானக விரும்புகிறவர்கள் ஆபிரகாமுக்கு எப்படி அந்த செழிப்பு கிடைத்தது என்றும் அறிவது நல்லது.
ஆபிரகாம் செழிப்பு மேல் கண் வைத்த போது முதலில் தேவனை மறந்தான். தற்போது மனைவியையும் கொடுத்தான்.
ஆபிராம் உணர்வற்று இருந்தாலும் தேவன் ஆபிராமை தெரிந்து கொண்டதால் ஆபிராமுக்கு உணர்வுண்டாக்கி திரும்ப பழைய கானானுக்கே அழைத்து வர விரும்புகிறார். இதற்காக ஆண்டவர் ஆபிராமோடு முன் போல நேரடியாக பேசவில்லை. மாறாக பார்வோனை கொண்டு பேச வைக்கிறார். பார்வோனுக்கு சில சிக்கல்களை கொடுத்து உண்மை அறிய செய்து பார்வோனை கொண்டு ஆபிராமுக்கு கட்டளை கொடுக்கிறார். (ஆதி12:19)
“உன் மனைவியையும் கூட்டி கொண்டு போ” என்பதே அந்த கட்டளை. இது பார்வோனின் கட்டளையாக இருந்தாலும் இதை சொல்ல வைத்தவர் தேவன். ஆம் ஆபிராம் செழிப்புக்காக எகிப்தில் இருப்பது தேவ சித்தம் அல்ல, மாறாக தேவன் கொடுத்த கானானில் வசிப்பது தான் தேவ சித்தம்.
ஆபிராம் அந்த கட்டளைக்கு கீழ்படிந்து கானான் தேசத்துக்கு திரும்புகிறார். தற்போது பார்வோன் கொடுத்த செல்வங்களும் ஏற்கனவே பழைய விக்கிரக ஆராதனை காரனாக இருந்த போது சம்பாதித்திருந்த செல்வங்களும் சேர்ந்து ஆபிராமிடம் பெரும் செல்வம் இருந்தது.
(ஆதியாகமம் 13:1-2
ஆபிராமும், அவன் மனைவியும், அவனுக்கு உண்டான யாவும், அவனுடனே லோத்தும், எகிப்தை விட்டு, தென்திசையில் வந்தார்கள்.
ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமானாயிருந்தான்.)
ஆபிராம் கானானில் தேவன் முதலில் பேசிய இடமாகிய மோரே எனும் இடத்துக்கு வந்தான். தற்போது அங்கே தான் ஏற்கனவே கட்டியிருந்த பலிபீடத்தில் தேவனை தொழுது கொண்டான் (ஆதி13:4). சில ஆண்டுகள் முறிந்திருந்த தேவ உறவு மறுபடி மலர காரணம் திரும்பி வந்ததே. இளைய குமாரன் தகப்பனிடம் திரும்பி வந்ததால் தான் மரித்திருந்த உறவு புத்துயிர் பெற்றது என்று நமக்கு தெரியும் அல்லவா!
உலக கவர்ச்சி தான் நம்மை (ஆபிராமை) தேவனை விட்டு பிரித்தது. தேவனை விட்டு மட்டுமல்ல உலக கவர்ச்சி, பொருளாசை பல வேளைகளில் குடும்ப உறவுகளையும் உதறி தள்ள வைக்கும் (ஆபிராம் தன் மனைவிக்கு பதில் செல்வம் பெற்றானே). மறுபடியும் உலக கவர்ச்சியை, சுய ஆசையை விட்டு திரும்பி வரும்போது தேவனோடு நம்மை இணைக்கிறது. குடும்பத்துக்கும் நன்மை பயக்கிறது.
ஆபிராம் தேவனோடு ஒப்புரவாகி தேவனை தொழுது கொண்டாலும் தேவன் உடனடியாக ஆபிராமோடு பேசவில்லை. ஆபிராமின் மனமாற்றத்தை உறுதிசெய்ய ஆண்டவர் ஒரு சோதனை வைக்கிறார். ஆபிராம் மற்றும் லோத்து பிரிந்து செல்ல கூடிய சூழல் அவர்களது வேலைக்காரர் மூலம் உருவான போது, ஆபிராம் மிகவும் செழிப்பான அதாவது ஏதேன் தோட்டத்தை போல, எகிப்தை போல செழிப்பான சோதோம் கொமேராவை தேர்ந்தெடுக்காமல் அதை லோத்துவுக்கு விட்டு கொடுத்தான். இதிலிருந்து பழையதுபோல செழிப்பை தேடி ஓடும் எண்ணம் ஆபிராமிடம் ஒழிந்து சகோதர பாசத்தை பேணும் எண்ணம் பெருகியிருப்பதை அறியலாம். இந்த சோதனையில் தன்னை நிருபித்த உடனே தேவன் மறுபடி ஆபிராமுடன் பேச ஆரம்பிக்கிறார். (ஆதி13:14)
நான் மனந்திரும்பினவன் என்பதை நமக்கு நிரூபித்து காட்டுவது நமக்கு ஏற்படுகிற சோதனையை மேற்கொண்டு நாம் வெற்றி பெறுவதே.
உலக கவர்ச்சி யில் சிக்கி கொள்ளும் சூழல் அதற்கேற்ற போதனைகள் பெருகியிருக்கிற இக்காலத்தில் அதில் சிக்கி தேவ உறவையும் குடும்ப உறவையும் இழக்காமல் தேவ அன்பில் நிலைத்திருப்போம்.
ஒருவேளை உலக கவர்ச்சியில் சிக்கி தேவ உறவையோ குடும்ப உறவையோ இழந்திருந்தால் மனந்திரும்பி வாருங்கள். ஆண்டவரும் உதவி செய்வார். இழந்த தேவ உறவை மலர செய்ய ஆவலாய் காத்திருக்கிறார்.
எனக்கு பேர் உண்டாக செய்வேன்

மனிதன் இயல்பாகவே என் பெயர் புகழ் பெற வேண்டும் எனும் விருப்பமுடையவன். எல்லோரை காட்டிலும் நான் பெரிதாக காணப்பட வேண்டும் எனும் எண்ணம் இயல்பாகவே இருக்கும். ஆகையால் தான் அநேகர் தங்கள் பெயருக்காக அநேக முயற்சி மேற்கொள்கிறார்கள். இன்று Tiktok, Reels போன்றவற்றில் ஏதாவது செய்து வீடியோ போட காரணமும் எனக்கு பேர் உண்டாக செய்ய வேண்டும் எனும் எண்ணமே ஆகும்.
இந்த பெயர் புகழ் பெறணும் எனும் போதை, தவறு என்று நாம் பேசும் மொழிகளே நமக்கு உணர்த்துகின்றன.
ஆதிமுதல் மக்கள் ஒரே மொழி பேசுகிறவர்களாகத்தான் இருந்தார்கள். நோவாவின் கால அழிவுக்கு பின் பெருகின மக்கள் ஓரிடத்தில் கூடி தமக்கு பேர் உண்டாக வானளாவிய கோபுரம் கட்டும் பணி செய்கின்றனர். ஒட்டு மொத்த மக்களும் ஒரே சிந்தையுடையவர்களாய் தங்கள் பெயர் காலம் கடந்தும் நிலைத்து நிற்க வேண்டும் எனும் தற்புகழ்ச்சி எண்ணமுடையவர்களாய் கூடினர்.
(ஆதியாகமம் 11:4
பின்னும் அவர்கள்: நாம் பூமியின் மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்.)
அப்படியானால் என் புகழுக்காக என் பெயர் விளங்கத்தக்கதாக ஒரு விஷயத்தை செய்ய கூடாதென்றால் எந்த அடிப்படையில் செயல்கள் செய்ய வேண்டும் என்பீர்களாகில் இறைவனுடைய புகழ் விளங்குவதற்கேற்ப செய்ய வேண்டும் என்பேன்
(1 கொரிந்தியர் 10:31
ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.)
மட்டுமல்ல இறை நம்பிக்கையை அல்ல அதீத சுய நம்பிக்கையை உடையவர்களாய் இருந்தனர். நாங்கள் செய்ய நினைத்த ஒன்றும் தடைபடாது. இன்னொரு வகையில் சொல்ல வேண்டுமானால் எங்களை யாராலும் தடுக்க முடியாது ஏன் கடவுளால் கூட தடுக்க முடியாது எனும் பெருமை பிடித்த எண்ணம் காணப்பட்டது.
(ஆதியாகமம் 11:6
…தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள்.)
இதே வேளையில் இந்த சுய நம்பிக்கைக்கு எதிரான யோபுவின் இறை நம்பிக்கையை கவனிப்பது நலம்
(யோபு 42:2
தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.)
வித்தியாசத்தை கவனித்தீர்களா?
இதே வேளையில் சுய நம்பிக்கை குறித்த உலக மனிதராகிய திருவள்ளவர் எழுதிய குறள் கூறுவதற்கும் வேத சத்தியத்துக்கும் உள்ள வித்தியாசத்தை காண்பிக்க விரும்புகிறேன்
திருக்குறள் 619
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
(பொருள்: தெய்வத்தின் அருளாலே கைகூடாது போனாலும், ஒருவனுடைய முயற்சியானது, தன் உடல் வருத்தத்தின் கூலியைத் தப்பாமல் தந்துவிடும்)
நீதிமொழிகள் 3:5-6
உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,
உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
இரண்டுக்கும் வித்தியாசம் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.
நாங்கள் செய்ய நினைத்தது தடைபடாது என்ற எண்முடைய அன்றைய மக்களை போல தான் பெரும்பாலான மக்கள் இன்று உள்ளனர் தங்களிடம் உள்ள வளங்களின் அளவீட்டை பொறுத்து.
இன்று பல கிறிஸ்தவ ஆலயங்கள் கூட எங்கள் பெயர் விளங்க பண்ண வேண்டும் அல்லது பெயர் நிலைத்து நிற்க வேண்டும் என்ற நோக்கில் தான் கட்டப்படுகிறது. ஆகவே தான் 100 கோடி எனவும் இதுவரை யாரும் கட்டியிராத மாடல் எனவும் அவர்களால் தம்பட்டம் அடிக்க முடிகிறது. இது வெறும் ஆலயங்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு தனிமனிதனுடைய வாழ்விலும் கூட நடக்கலாம். நான் செய்யும் எந்த செயலும் என் பெயர் விளங்க செய்கிறேனா மற்றும் நான் எதை செய்ய நினைக்கிறேனோ அதை யாராலும் தடுக்க முடியாது என்ற எண்ணமுடையவனாயிருக்கிறேனா என சிந்தித்து பார்ப்பது நலம்.
உதாரணத்துக்கு ஒரு வீடு கட்டுகிறேன் அல்லது வாகனம் வாங்குகிறேன் என்றால் இந்த ஊரில் என் பெயர் விளங்கத்தக்கதாக செய்கிறேனா அல்லது என் தேவையின் அடிப்படையில் செய்கிறேனா என சிந்திப்பது அவசியம்.
அதுபோல என்னிடம் இவ்வளவு செல்வாக்கு இருக்கிறது அல்லது இவ்வளவு பணம் பொருள் சொத்து இருக்கிறது ஆகையால் நான் எதை எப்போ நினைத்தாலும் செய்ய முடியும் என்ற எண்ணமுடையவனாயிருக்கிறேனா அல்லது தேவன் தான் சர்வ வல்லவர் அவர் செய்ய நினைத்தது மட்டுமே யாராலும் தடுக்க முடியாது. அவருடைய சித்தத்தை தான் நான் செய்ய வேண்டும் என்ற எண்ணமுடையவனாயிருக்கிறேனா என்று சிந்திப்பது அவசியம்.
எனது பெயர் விளங்க செய்யும் காரியமும் நான் நினைத்தை யாராலும் தடுக்க முடியாது எனும் எண்ணமும் தேவனுக்கு எதிரானவை.
ஆகையால் தான் இந்த எண்ணத்தின்படி செயல்பட்ட மக்கள் கட்டிய கோபுர வேலை தொடர்ந்து நடக்காதபடி தேவன் இறங்கி ஒரே மொழி பேசிய மக்களின் மொழிகளை தாறுமாறாக்கி பல மொழிகளாக்கி ஒருவர் பேசுவது பிறருக்கு புரியாதபடி செய்தார். தவறான எண்ணத்தோடு கூடியிருந்தவர்களை சிதறடித்தார்.
(ஆதியாகமம் 11:7-9
நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார். அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்; அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள். பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின் பேர் பாபேல் என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்.)
இன்று உலகில் உள்ள பல மொழிகளை காணும் நமக்கு இந்த உண்மைகள் எப்பொழுதும் நிலைத்திருக்க கடவது
1) என் பெயர் புகழுக்காக செய்வேன் என்பதல்ல தேவனுடைய நாம மகிமைக்காகவே செய்வேன் என்பதே
2) நான் நினைத்தது தடைபடாது என்பதல்ல தேவன் நினைத்தது தடைபடாது என்பதே
காணிக்கை
பாவத்தினிமித்தம் ஏதேனை விட்டு துரத்தப்பட்ட ஆதாம் ஏவாளுக்கு காயீன் , ஆபேல் என்று பிள்ளைகள் பிறந்தார்கள். மூத்தவனான காயீன் ஒரு விவசாயி. இளைய ஆபேல் ஆடு மேய்ப்பவன்.
இரண்டு பேரும் கடவுளுக்கு காணிக்கை படைத்தனர். ஆனால் ஆண்டவர் ஆபேலின் காணிக்கையை மட்டும் ஏற்று கொண்டார். காயீனுடைய கணிக்கை அங்கிகரிக்க படவில்லை. இதனால் எரிச்சலடைந்த காயீன் தன் தம்பி ஆபேலை கொன்றான். ஆபேலின் ரத்தம் தேவனை நோக்கி முறையிட்டது. ஆண்டவர் காயினை சபித்தார்.
தம்பியின் ரத்தத்தை சிந்திய காயீன் எஞ்சிய காலங்களில் பயந்து பயந்து நிம்மதியற்ற வாழ்வு வாழ்ந்தான்.
ஆண்டவர் ஏன் ஆபேலின் காணிக்கையை மட்டும் அங்கிகரித்தார்?
காரணம் முதலில் ஆபேல் ஆண்டவருடைய அங்கிகரிப்புக்கு தகுயாயிருந்தான். ஆகவே அவனது காணிக்கையும் ஏற்றுகொண்டார். ஆபேல் தன் வாழ்வையே ஆண்டவருக்கு கொடுத்திருந்தான். ஆண்டவர் விரும்பினபடி வாழ்ந்தான். ஆனால் காயீன் அப்படி அல்ல. ஆண்டவர் காயீனை அங்கிகரிக்கும் அளவிலான வாழ்வு வாழவில்லை. ஆகவே அவனை அங்கிகரிக்கவில்லை. காயீனையே அங்கிகரிக்காதபோது அவன் காணிக்கையை எப்படி அங்கிகரிக்க முடியும். இன்றும் நம்மில் அநேகர் காயீனை போல தான் நினைக்கிறோம். நாம்முடைய வாழ்வை அவருக்கு கொடுக்க மாட்டோம். ஆனால் நம்முடைய காணிக்கையை மட்டும் அங்கிகரிக்க வேண்டுமென நினைக்கிறோம். நடக்காது.
ஆண்டவருக்கு தேவை மனிதனேயன்றி அவனுடைய பொருள் அல்ல.
காரணம்
(பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது. சங் 24 :1 )
நான் பசியாயிருந்தால் எனக்குச் சொல்லேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே. நான் எருதுகளின் மாம்சம் புசித்து, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ? சங்கீதம் 50:12-13)
( இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம், தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது, நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வுநாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச்சகிக்கமாட்டேன். ஏசா 1 :13)
ஆண்டவர் முதலாவது ஆபேலை ஏற்று கொள்ளும்படி என்ன செய்யதான். தேவனை விசுவாசித்து காணிக்கை கொடுத்தான். ஆபேல் காயினை விடவும் உயர்வான காணிக்கை கொடுக்க காரணமே அவன் தேவனை முழுமையாக விசுவாசித்தான்.
(விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக் குறித்து தேவனே சாட்சிகொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான். எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:4)
தேவனை விசுவாசிப்பது என்பது தேவன் தான் எல்லாம், அவர்தான் என் வாழ்வின் முதலானவர் என்று நம்பி அவர் சொல்வதை அப்படியே செய்வதாகும். அது ஆபேலின் செயலில் வெளிப்பட்டது.
(விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:6)
ஆபேல் இந்தவிதமாய் தேவனை விசுவாசித்து காயினை போல கடமைக்கு காணிக்கை கொடாமல் முதலீற்றையும் கொழுமையுமானதையும் கொடுத்தான்.
தேவனை சரியாக விசுவாசித்த ஆபேலிடம் காயின் மேல் பொறாமை இல்லை. மாறாக தேவனை சரியாக விசுவாசியாத காயீனிடமோ எரிச்சல் உள்ளிட்ட துர்குணங்கள் இருந்தது. அது அவனை கொலைகாரனாக மாற்றியது.
தேவனை விசுவாசித்து வாழும் வாழ்வு வாழ்ந்த ஆபேலை தேவன் அங்கீகரித்திருந்தார். காணிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது
சிலர் காயீனை போல சம்பிரதாயமான, சடங்காச்சாரமான, தவறான வாழ்க்கை வாழ்ந்து ஆண்டவருக்கு அதிக காணிக்கை கொடுத்து தவறை சரிபடுத்தலாம் என எண்ணலாம். நிச்சயம் நடக்காது. அவருக்கு தங்களை முதலாவது கொடுக்க வேண்டும்
இன்று இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து இரட்சிக்கப்பட்டவர்கள் இனி வாழ்வது நானல்ல இயேசுவே என்னில் வாழ்கிறார் என்ற மனநிலையில் வாழ்வதால் அந்த விசுவாச அடிப்படையில் மனப்பூர்வமாக உற்சாகமாக தேவையானவர்களுக்கு செய்யும் தர்மசகாய உதவிகள் தேவனால் அங்கீகாரம் பெறும்.
ஆனால் கடவுளுக்கு கொடுத்தால் எனக்கு பல மடங்காக திருப்பி கொடுப்பார் இன்னும் பெரிய பணக்காரனாகலாம் என்ற சுயநல நோக்கோடு காணிக்கை பணங்களை பணக்கார பாஸ்டர்களுக்கோ புண்ணியத்தலங்களுக்கோ கொடுப்போர் தேவனால் அங்கீகரிக்கப்படுவதில்லை
சாயல் மாற்றம்
காயீன் ஆபேலை கொன்று ஓடிபோனபின் சேத் என்ற மகனை பெற்றான் ஆதாம்.
ஆதாம் தேவசாயலில் உருவாக்கப்பட்டான். அதாவது தேவனைபோல, தேவ சுபாவபடி.
(ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார். ஆதியாகமம் 5:1)
ஆனால் ஆதாம் பாவம் செய்தபடியால் தேவசாயல் தொடரவில்லை
(ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் (ஆதாமின்) சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான். ஆதியாகமம் 5)
ஆதாமின் சாயல்தான் சேத்துக்கு வந்தது. தேவ சாயல் தொடராமல் மனித சாயல் தொடர ஆரம்பித்தது. சிந்தியுங்கள். அன்று பாவம் நடைபெறவில்லையென்றால் தேவசாயல் தொடர்ந்து நாமும் தேவசாயலில் இருந்திருப்போம்.
ஆனாலும் ஓர்நாளில் மறுபடியும் அவரை போல நம்மை மாற்றுவார். நாம் நித்ய வாழ்வுக்குள் பிரவேசித்தால்
(பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். யோவான் 3:2)
அவரைபோல நாமும் மாறபோகிறோம். இது நற்செய்தி
இதற்கு நாம் அவருடைய பிள்ளைகளாய் தேவனால் பிறந்தவர்களாய் இருக்க வேண்டும் என்பது மட்டுமே.
இந்த நம்பிக்கை கொண்டவர்கள் இந்த பூமியில் வாழும் காலம்வரை தங்களை தாங்களே சுத்திகரித்துகொள்ளுவர்.
(அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான். 1யோவான் 3:3)
ஓய்வுநாள்
ஆண்டவர் 6 நாட்களிலுமாக எல்லாவற்றையும் படைத்து மனிதனையும் உண்டாக்கினார். பின் 7வது நாளில் ஓய்ந்திருந்தார். ஆண்டவர் ஓய்ந்திருந்தார் என்பது ஆறு நாள் வேலை செய்த களைப்பில் ஓய்வு எடுத்தார் என்ற பொருளில் அல்ல, மாறாக ஆறு நாளில் எல்லாவற்றையும் படைத்து முடித்ததால் அடுத்து வேறு எதையும் படைக்க இல்லாததால் ஒய்ந்திருந்தார் என்றே பொருள் கொள்ள வேண்டும். அந்த நாளை ஆண்டவர் ஆசீர்வதித்தார் மட்டுமல்ல பரிசுத்தமாக்கினார்.
தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளை எல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். (ஆதியாகமம் 2:2)
ஆண்டவர் ஓந்திருந்த நாளை பரிசுத்தமாய் ஆசரிக்க வேண்டும் என்று இஸ்ரேலருக்கு கட்டளையும் தந்தார்.
( ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக. யாத் 20 :8)
(ஆறுநாளும் வேலைசெய்யவேண்டும், ஏழாம்நாள் பரிசுத்த சபைகூடுதலான ஓய்வுநாள், அதில் ஒரு வேலையும் செய்யவேண்டாம்,; அது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் நாளாயிருப்பதாக. லேவி 23 :3)
என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்தபடி, உன் காலை விலக்கி, உன்வழிகளின்படி, நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும் உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால். ( ஏசாயா 58:13)
கிறிஸ்தவர்களுக்கு ஓய்வுநாள் ஆசரிப்பு கட்டளையாக இல்லை எனினும், பல வேளைகளில் ஓய்வு நாளை ஏன் ஆண்டவர் ஏற்படுத்தினார் என்ற உண்மையை பல வேளைகளில் அநேகர் உணர்வதில்லை.
ஆண்டவரே ஒரு நாள் ஓந்திருந்தார். ஏன் ஆண்டவர் நினைத்திருந்தால் ஒரு நாளிலேயே அனைத்தையும் படைத்து மீதமுள்ள எல்லா நாளிலும் ஓய்ந்திருக்க முடியாதா? பின் ஏன் ஆறு நாட்களாக படைத்து பின் ஏழாவது நாள் ஓய்ந்திருந்தார்.
தேவன் ஒரு நாளில் படைத்திருக்க முடியும். ஆனால் வாரத்தில் எல்லா நாளும் வேலை செய்ய கூடாது. கண்டிப்பாக ஒருநாள் ஓய்வு தேவை என்று மனிதனுக்கு உணர்த்துவிக்கவே அப்படி செய்தார். இதை இயேசு கிறிஸ்துவின் வாக்கிலிருந்து அறியலாம்.
24×7 என்று ஓடுகிற மனிதா வாரத்தில் ஒரு நாள் உனக்கு ஓய்வு தேவை. மனிதனை படைத்த தேவனுக்குதானே தெரியும் அவனது உடல் நிலை பற்றி. ஒரு machine உருவாக்கும் பொறியாளர் அது எவ்வளவு நேரம் தொடர்ந்து வேலை செய்யலாம் எவ்வளவு நேரம் ஓய்வு தேவை என தீர்மானித்து சொல்வது போல மனிதனை படைத்த ஆண்டவர் மனித உடல் எவ்வளவு வேலை செய்யும் எப்பொழுது ஓய்வு தேவை என்பதை சொல்லியுள்ளார். ஆகவே ஓய்வு நாள் மனிதனுக்காகவே மனிதனின் நலனுக்காகவே ஏற்படுத்தபட்டது
(பின்பு அவர்களை நோக்கி,மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை,ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது.
மாற் 2 :27)
இதை அறியாமல் உடலுக்கு ஓய்வே இல்லாமல் வேலை செய்ய வேண்டாம். 30நாட்களும் ஓய்வின்றி வேலை செய்து உடலை கெடுக்கவும் வேண்டாம்.
மேலும் வாரத்தில் ஒருநாள் உள்ள ஓய்வை இறைமக்களாக ஒன்றிணைவதற்கு (சபை கூடி வருதல்) பயன்படுத்தலாம். 6 நாட்கள் வேலை நிமித்தம் ஏற்படும் உடல் வலியை குறைக்க Rest உதவுகிறது. ஆனால் 6 நாட்கள் வேலை நிமித்தம் ஏற்படும் மன அழுத்தம், மன சோர்வு போன்றவைகளை குறைக்க இந்த அன்பின் ஐக்கியம் உதவும். ஒருவரை ஒருவர் கவனித்து ஒருவருக்கொருவர் புத்தி சொல்லி ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி கொள்ள இந்த ஓய்வு நாள் உதவும். இதனிமித்தம் பணி நிமித்தம் உள்ள மனச்சுமை நீங்கி புத்துணர்ச்சியுடன் அடுத்த வாரத்தில் பிரவேசிக்க இயலும்.
(நடைமுறையில் மேற்கூறிய ஒருவரையொருவர் கவனித்து புத்திசொல்லி அன்பை பரிமாறும் செயல்கள் சபை கூடுகையில் இல்லாத நிலை உள்ளது. சபையிலே வெறும் பாடுவதற்கும் செய்தி கேட்பதற்கும் செல்லும் நிலை தான் உள்ளது. மேலும் சில சபைக்கு சென்றால் மனச்சுமை நீங்கும் என எதிர்பார்த்தால் அங்கே போடும் பதவி சண்டைகள் நிமித்தம் மேலும் மன அழுத்தம் வரும் நிலைதான் உள்ளது)
அப்படியாயின் ஒத்த உபதேச கருத்த உள்ளவர்கள் சிறிய குழுவாயினும் இணைந்து அதை சரியாக நடைமுறை படுத்தலாம்.
மேலும் குடும்பத்தை விட்டு வேலையை குறித்தே அதீத சிந்தனையில் இருப்போர் அந்த ஒருநாளாகிலும் முழுதுமாக குடும்பத்தினருடன் செலவிட்டு சந்தோஷமாக இருக்கலாம்.
ஆண்டவர் இதற்காக தான் மனிதனுக்காக ஓய்வுநாளை நியமித்தார். இஸ்ரவேலருக்கு கட்டளையாகவும் கொடுத்தார். இஸ்ரேலர் கடைபிடித்தனர்- ஆனால் ஏன் ஆண்டவர் நியமித்தார் என்ற உண்மை தெரியாமலேயே
இன்று நமக்கு தெரியும் ஆண்டவரின் இருதயத்தில் இருந்தது என்ன? எதற்காக ஓய்வுநாளை நியமித்தார் என்று.
ஆனால் இதை புரியாமல் பலர் அதை சடங்காக இஸ்ரேலரை போல அனுசரிக்க நினைக்கின்றனர். ஆகவே தான் சனிக்கிழமையை முக்கியப்படுத்தி அநேகருக்கு இடறலாக உள்ளனர்.
எப்படியெனில் ஞாயிற்றுகிழமை அல்லது வெள்ளிகிழமை விடுமுறைநாள் உள்ள நாடுகளில் வசித்து வேலை செய்பவர்களில் பலருக்கு சனிக்கிழமை விடுமுறை இருக்காது. அப்படி பட்டவர்களிடம் சனிக்கிழமை தான் உண்மையான ஓய்வுநாள் இந்தநாளில் தான் வேலை செய்ய கூடாது, மீறி சனிக்கிழமை வேலை செய்து ஞாயிற்றுக்கிழமையோ வெள்ளிகிழமையோ ஓய்ந்திருந்தாலும் அது பாவம் என கூறி பலரை பயமுறுத்தி இடற பண்ணுகின்றனர்.
ஆண்டவர் ஏன் ஓய்வுநாளை நியமித்தார் என்றும் அவரது இருதயத்தில் இருந்தது என்ன என்றும் பார்த்தோம். அதிலிருந்து ஓரு நாளை முக்கியப்படுத்துவதோ சடங்காச்சாரமாக பக்தி காரியங்களை செய்வதோ அல்ல தேவனின் மனதில் இருந்தது என்றும் பார்த்தோம். மாறாக ஓயாமல் வேலை செய்யும் மனிதனின் (சரீரம் மற்றும் மனம்) மீதுள்ள பாசமே தேவனின் மனதில் இருந்தது என்று பார்த்தோம்.
ஆகையால் மனிதனின் உடலுக்கு வாரம் ஒருநாளாகிலும் ஓய்வு கொடுங்கள். மனதின் புத்துணர்ச்சிக்கு சபை ஐக்கியம் கொள்ளுதலும் குடும்பத்தினருடன் இன்பமாய் நேரத்தை செலவிடுதலும் செய்யுங்கள்
ஓய்வு நாள் நமக்காகத்தான் உண்டாக்கப்பட்டது. தேவனுக்காக அல்ல